முதல்வர் ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால்.. செந்தில் பாலாஜி குறித்து பேசிய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ஆர்

Jul 5, 2023, 11:36 PM IST

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீதும், தமிழ் இனத்தின் மீதும், தமிழ் மக்கள் மீதும் மகத்தான அன்பும் மரியாதையும் வைத்துள்ளார். அதனால் தான் இன்று மூன்று தமிழர்கள் இந்திய தேசத்தின் நான்கு மாகாணங்களின் கவர்னராக பணியாற்றும் வாய்ப்பளித்துள்ளார். இதனை ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். இன்று தமிழகத்திற்கு முதன்முறையாக நான் வருகை புரிந்துள்ளேன். ஆளுநரின் செயல்பாடுகள் அந்த மாநில அரசின் அணுகு முறையையும் பொருத்து அமைந்துள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கு இயலாது.

ஆளுநர் என்பவர் அதிகாரம் செய்வதற்கு வந்ததாக நாம் கருதக்கூடாது. அரசியல் சட்டத்தின் படி மாநில அரசு செயல்பட வேண்டும் என்பதை நிர்வாகிக்கின்ற பொறுப்பில் ஆளுநர்கள் இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. மணிப்பூர் பொறுத்தவரையில், அங்கு வந்து ஒரு தீர்ப்பினை தொடர்ந்து அங்கு உள்ள இரு வேறு பிரிவினர்களுக்கு இடையே இருந்த பகை மேலோட்டத்திற்கு வந்துள்ளது. அதன் காரணமாகவே அங்கு தனியாக கலவரங்கள் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது அங்கு படிப்படியாக கலவரங்கள் அடங்கி வருகின்றன அரசம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

அது ஒரு உணர்வுபூர்வமான கலவரமாக இருக்கக்கூடிய காரணத்தினால் அதனை கட்டுப்படுத்துவது எளிதானது அல்ல. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்க துறையினர் வழக்கு தொடர்ந்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த அவர், யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். நான் முதலமைச்சர் ஸ்தானத்தில் இருந்திருந்தால் கண்டிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறிது காலம் பதவியிலிருந்து விலகி இருங்கள் உங்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாத பட்சத்தில் உங்களை மீண்டும் சேர்த்துக் கொள்வேன் என்ற உறுதியைத்தான் தந்திருப்பேன். அப்படி நடப்பது தான் எதிர்காலத்தில் தமிழகத்தில் தார்மீகமான அரசியல் வளர்வதற்கு உதவும்.

அந்த வகையில் தான் இதனை பார்க்க வேண்டுமே தவிர ஏதோ ஒரு தனிப்பட்ட நபரின் மீது எடுக்கப்படுகின்ற பழிவாங்குகின்ற நடவடிக்கையாக இதனை பார்க்க கூடாது. ஒரு வருட காலமாக பெட்ரோல் டீசல் உயரவில்லை, மற்ற நாடுகளில் எல்லாம் பெட்ரோல் டீசல் விலை கூடி வருகிறது. இந்நேரத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டிய வேண்டிய அரசாங்கமாக நமது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. மிக வேகமாக முன்னேறி வருகின்ற பொருளாதாரமாக நமது பொருளாதாரம் மாறி உள்ளது. ஓட்டு வங்கி அரசியலை மட்டுமே நாம் நம்பிக் கொண்டிருப்பது எதிர்காலத்தில் பல்வேறு சமூகங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தாது.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பல்வேறு கட்சியினர் இணைந்து பாஜகவை எதிர்ப்பது குறித்து கேள்விக்கு, ஜனநாயகத்தில் அவர்களுக்கு இருக்கின்ற உரிமையை அவர்கள் முயற்சிக்கிறார்கள், ஆனால் அவர்களிடம் ஒற்றுமை இருக்கின்றதா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்பட கூடாது என்று சொல்லுவது பாஜக வேலை அல்ல, அவர்கள் அதனை முயற்சிக்கிறார்கள் மக்களும் அதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்திற்காக ஒற்றுமை என்பது வேறு, நாட்டின் நலனுக்கான ஒற்றுமை என்பது வேறு என்று கூறினார்.

Senthil Balaji Case : அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. நாளை பிற்பகல்.! எகிறும் எதிர்பார்ப்பு.!!