Dec 8, 2022, 2:07 PM IST
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி.காலனி பகுதியை சேர்ந்தவர் நாராயணன். அதிமுக இளைஞரணி மாவட்ட துணை தலைவராக பதவி வகித்து வகித்து வரும் இவர் அதே பகுதியில் பேரூர் சாலை அருகே மணி மருந்தகம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக மருந்து கடை நடத்தி வருகிறார்.
வாடகை கட்டிடத்தில் மருந்தகம் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட உரிமையாளரான மாரியப்பன் கட்டிடத்தை விற்பனை செய்ய இருப்பதாகவும் அதனால் மருந்தகத்தை காலி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆனால் கட்டிடத்தை விற்பனை செய்வதாக இருந்தால் அதனை தானே வாங்கி கொள்வதாக கூறி நாராயணன் காலி செய்யாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து கட்டிட உரிமையாளர் மாரியப்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் பேரில் வாடகை பணத்தை நாராயணன் நீதிமன்றம் மூலம் செலுத்தி வந்துள்ளார். இதனிடையே இன்று அதிகாலை மருந்தகத்திற்கு வந்த இருபதுக்கும் மேற்பட்டோர் மருந்தகத்தை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை சூறையாடி ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளனர்.
மேலும் கடையின் பெயர் பலகையையும் கருப்பு நிற வர்ணம் பூசி அழித்துள்ளனர். இது குறித்து காலையில் தகவலறிந்த நாராயணன் உடனடியாக செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் வியாபாரிகள் சங்கத்திலும் அளித்த தகவலின் பேரில் வியாபாரிகள் சங்கத்தினர் காவல்நிலையத்தில் திரண்டனர்.
அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்டிகளை கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மருந்தகத்தை சூறையாடியது கட்டிட உரிமையாளர் மாரியப்பனின் மருமகன் கௌதம் மற்றும் செல்வபுரம் பகுதியை சேர்ந்த திமுக வை சேர்ந்த சிலர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்..