ஒரு வாரமாக குடிநீர் இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள்; சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு...

First Published Jul 4, 2018, 10:51 AM IST
Highlights
Village people suffer without drinking water for a week held in road block protest


பெரம்பலூர்
 
பெரம்பலூரில் ஒரு வாரமாக குடிநீர் இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள் பெரம்பலூர் - துறையூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் ஊராட்சியில் உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்த கிராம மக்களுக்கு அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் ஆழ்குழாயில் இருந்து தொட்டிக்குச் செல்லும் குழாய் உடைந்ததால் கடந்த ஒரு வாரமாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட தொலைவு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். 

இதுகுறித்து நக்கசேலம் ஊராட்சி செயலாளரிடம் புகார் கொடுத்தனர். எனினும் இதுநாள் வரை குடிநீர் விநியோகிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று வெற்றுக் குடங்களுடன் பெரம்பலூர் - துறையூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் ரவிந்திரன், ஆலத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ், பாடாலூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார், செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

அதன்பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் முடிவில் குழாய் சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. 

இதனையேற்று பொதுமக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

click me!