தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6ஆம் தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, பணத்தை கொண்டு சென்ற புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை எடுத்து சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் கோரியுள்ளார். மேலும், தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை என தெரிவித்துள்ள அவர், தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.
ஒரு டயருக்கு ரூ.5000 அபராதம்: கேரள போலீசார் மீது தமிழக இளைஞர்கள் காட்டம்!
பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற்ற வாக்குமூலங்கள் அடங்கிய ஆவணங்கள், நயினார் நாகேந்திரன் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் நாகேந்திரன் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக, இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் என்பவர் தனது நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரிடம் கொடுத்து அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியின. அதனடிப்படையில், அவர்கள் மூவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டது. அப்போது, அந்த பணத்துக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்த முருகன், நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய இருவரை அனுப்பி வைத்ததாக தெரிவித்திருந்தார். இந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.