விஜயகாந்திற்கு மத்திய அரசு சார்பாக மே 9ஆம் தேதி பூஷன் விருது வழங்க இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்திருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பந்தலை திறந்த பிரேமலதா
தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு மத்திய அரசு சார்பாக பத்மபூசன் விருது அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் கூட்டணியில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவோடு தேமுதிக கூட்டணி வைத்தது. இதன் காரணமாக விஜயகாந்திற்கு பத்ம பூசன் விருது கொடுப்பது தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்திற்கு பத்ம பூசன் விருது வழங்குவது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார்.
தேமுதிகவிற்கு அதிமுக ஒத்துழைப்பு
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களின் கஷ்டத்தை தீர்க்க தமிழ்நாடு முழுவதும் தேமுதிக சார்பாக தண்ணீர் பந்தல் தொடங்கப்படும் என கூறினார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் கடந்த ஒரு மாதங்களாகவே விருதுநகரில் தங்கி இருந்து தனது தேர்தல் பணிகளை முடித்துள்ளார். பெரும்பாலான மக்கள் விஜய பிரபாகரனுக்கு வாக்களித்ததாக தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேமுதிகவிற்கு தேர்தல் களத்தில் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என தெரிவித்தார்.
விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது
இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் எப்படி ஆதார் கார்டு உள்ளது அதேபோல் ஒவ்வொரு நபர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் இதனை நான் ஒரு கோரிக்கையாக வைக்கிறேன் என தெரிவித்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு பத்மபுஷன் விருது வழங்குவதற்கான எதாவது அழைப்பு வந்ததாக என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், வரும் 9 தேதி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்மபுஷன் விருது வழங்கப்பட உள்ளது. அதற்கான அழைப்பு நேற்று தான் எங்களுக்கு வந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நானும், விஜயபிரபாகரனும் செல்ல இருப்பதாக பிரேமலதா கூறினார்.