நிலத்திற்கு உரிய இழப்பீடு தராததால் தாலுகா அலுவலகத்தில் உள்ள பொருட்கள் பறிமுதல்; நீதிமன்ற ஊழியர்கள் அதிரடி... 

First Published Jul 11, 2018, 8:29 AM IST
Highlights
Things confiscated in taluk office for not giving compensation for land


நாமக்கல்

அகல இரயில்பாதை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் இராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தளவாடப் பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். 

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் தாலுகாவைச் சேர்ந்த குமாரபாளையம், கீரனூர், சேலம் குகை பகுதியைச் சேர்ந்த குணசேகரன், ராஜசேகரன், பொன்னுசாமி, ஜெயகுமார் உள்பட 23 பேரின் நிலங்கள் சேலம் - கரூர் அகல இரயில்பாதை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டது. 

கையக்கப்படுத்திய நிலத்திற்காக அரசு கொடுத்த இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை என்றம் ரூ.11 கோடியே 52 இலட்சத்து 2258-ஐ இழப்பீடாக இரயில்வே துறை மற்றும் நில எடுப்பு தாசில்தார் அலுவலகம் தரவேண்டும் என்றும் இராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு 23 பேரும் வழக்கு ஒன்றை போட்டனர். 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும்படி கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இந்த நிலையில், ஒரு வருடம் ஆகப்போகும் நிலையில் இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்று கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ஆம் தேதி நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தனர் நிலத்தின் உரிமையாளர்கள்.

இரயில்பாதை திட்டத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்பதால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி இராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபா சந்திரன், இரயில்வே துறைக்குச் சொந்தமான ரூ.15 இலட்சம் மதிப்புள்ள கார், ரூ.15 இலட்சம் மதிப்புள்ள டிராலி போன்றவற்றை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

அதுமட்டுமின்றி, இராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ரூ.14 இலட்சம் மதிப்புள்ள 2 ஜீப்கள் உள்பட ரூ.28 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தாசில்தார் அலுவலக பொருட்களை பறிமுதல் செய்யவும் அதிரடி உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி, இராசிபுரம் இரயில் நிலையம், நாமக்கல்லில் உள்ள நில எடுப்பு தாசில்தார் அலுவலகத்திற்காக இராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள வாகனங்களையும், கம்ப்யூட்டர் உள்பட பொருட்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்ற ஊழியர் சென்றார். 

அப்போது அதிகாரிகள், கால அவகாசம் தரும்படி கேட்டுக் கொண்டனர். இதனால் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்த நிலையில் இதுவரை இழப்பீடு வழங்காததால் இராசிபுரம் சார்பு நீதிபதி பிரபா சந்திரன் நேற்று முன்தினம் மறுபடியும் இராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தளவாட பொருட்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். 

அதன்பேரில் நிலத்தின் உரிமையாளர்கள் சுப்பிரமணி, பெரியசாமி, ராஜசேகரன் ஆகியோருடன் நீதிமன்றம் ஊழியர்கள் நேற்று இராசிபுரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர்.

அங்கு ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் இல்லாததால் அங்கிருந்த மேஜைகள் உள்ளிட்ட தளவாட பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு கொண்டுவர தாலுகா அலுவலகத்தின் முன்பு அடுக்கி வைக்கப்பட்டன. 

காலஅவகாசம் கொடுத்தும் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் தாலுகா  அலுவலகத்தில் இருந்த பொருட்களை  நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!