மதுரையில் தொழில் அதிபர் ஒருவர் தனது 48வது பிறந்த நாளில் தனக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்தும், உணவு பரிமாறியும் ஆசி பெற்றது ஆசிரியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை மாநகர் சூர்யாநகர் மீனாட்சியம்மன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்குமரன் (வயது 48). தொழிலதிபரான இவர் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டுவருகிறார். மேலும் ஏழை எளியோருக்கு உதவிகளை செய்துவருகிறார். இந்நிலையில் இளங்குமரன் தனது 48வது பிறந்த நாளை முன்னிட்டு தான் வாழ்நாளில் கல்வி பயின்ற 3 பள்ளிகளில் தனக்கு ஆரம்ப கல்வி தொடங்கி உயர்கல்வி வரை பாடம் கற்றுதந்த ஆசிரியர்களிடம் ஆசி பெற வேண்டும் என எண்ணினார்.
இதற்காக தனக்கு பாடம் கற்றுக்கொடுத்த 13 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தனது பிறந்த நாளில் அவரது வீட்டிற்கு அழைத்துவந்தார். ஒவ்வொரு ஆசிரியருக்கும் சந்தானமாலை அணிவித்து வரவேற்ற இளங்குமரன். வீட்டிற்குள் அழைத்துவந்து ஒவ்வொரு ஆசிரியர்களையும் அமரவைத்து பாதபூஜை செய்து வணங்கி வாழ்த்துபெற்றார்.
undefined
தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர்களது பெயர்களுடன் " உபாத்தியார் விருதுகளை" வழங்கினார். இதனையடுத்து ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் தனது கையால் பிரியாணி விருந்துகொடுத்து உபசரித்து பள்ளிப்பருவத்தில் ஒவ்வொரு ஆசிரியர்களுடனான நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியடைந்தனர்.
தன்னுடைய மாணவன் சமூகத்தில் நல்ல நிலைமைக்கு வந்த பின்னர் தங்களை மறக்காமல் தேடி அழைத்துவந்த நன்றி தெரிவித்து ஆசி பெற்றது எங்களை ஈடில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எங்களது மாணவன் எப்போதும் அனைவருக்கும் உதவும் மனப்பான்மையோடு நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.