சட்ட அமலாக்கதுறையினர் அல்லது அதிகாரிகள் எனக்கூறி தொலைப்பேசியில் அழைப்பவர்களின் அடையாளத்தை எப்போதும் சரிபார்க்கவும். அவர்களின் பெயர் மற்றும் அவர்கள் சார்ந்த துறையைக் கோர வேண்டும் என தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சைபர் கிரைம் மோசடி
அமலாக்கத்துறை அதிகாரி, அரசு அதிகாரி என மிரட்டி தொலைப்பேசி மூலம் பணம் பறிக்கப்படுவதாக தமிழக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபர் மோசடி செய்பவர்கள் ஒரு அதிநவீன மற்றும் சூழ்ச்சித்தந்திரத்தை உள்ளடக்கிய ஒரு புதிய மோசடியை தற்போது கையாளுகிறார்கள். மோசடி செய்பவர் சட்ட அமலாக்கதுறை அதிகாரிகளை போல ஆள் மாறாட்டம் செய்கிறார். பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர், பண மோசடி அல்லது சைபர் கிரைம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார். மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவரை சிறைவாசம் மற்றும் அவமானம் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்கநேரிடும் என அச்சுறுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பீதியையும் பயத்தையும் ஏற்படுத்துகிறார்.
மோசடி எவ்வாறு நிகழ்கிறது?
மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவருடன் பெரும்பாலும் தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்பைத் தொடங்குகிறார். சட்ட அமலாக்கத்துறையினர், அரசாங்க அதிகாரிகள் அல்லது நம்பகமான அமைப்பின் பிரதிநிதிகள் என்று போலியாக கூறுகிறார். மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவருக்கு பயத்தையும் பீதியையும் ஏற்படுத்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் மோசடி குற்றத்தில் ஈடுபட்டதாக பொய்யாகக் கூறுகின்றார். போலியான பெயர்கள், வழக்கு எண்களை வழங்குதல் அல்லது சிறைத் தண்டனை போன்ற சட்ட ரீதியான விளைவுகளை கூறி அச்சுறுத்துவது போன்ற நம்பக் கூடியதாகத் தோன்றும் வகையில் விவரங்களை கூறுகின்றார்.
மோசடி செய்பவர் போன் எண்களை Spoof செய்து ஏமாற்றுதல் அல்லது அழுவது/ கத்துவது போன்ற துன்பகரமான பின்னணி சத்தத்தை பயன்படுத்துதல் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். பாதிக்கப்பட்டவர் விரைவாகச் செயல்படவும். மோசடி செய்பவரின் கோரிக்கைகளுக்கு இணங்கவும் அழுத்தம் கொடுக்கப்படுகிறார்.
மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவரை வெளி உலகத் தொடர்பு மற்றும் சம்பவத்தின் உண்மை தன்மையை சரிபார்ப்பதை தடுத்து, தொலைபேசியில் இருக்குமாறு அறிவுறுத்தி, வேறுயாரையும், குறிப்பாக குடும்ப உறுப்பினரைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என கூறுகின்றார். இது பாதிக்கப்பட்டவர் பிறர் உதவியை நாடுவதிலிருந்தும் உண்மைத் தன்மையை சுயமாக உறுதிப்படுத்துவதிலிருந்தும் தடுக்கிறது. மோசடி செய்பவர், இந்த நெருக்கடியைத் தீர்க்க அல்லது மேலும் பின் விளைவுகளைத் தடுக்க பாதிக்கப்பட்டவரிடமிருந்து உடனடியாக பணம் கோருகிறார். பயத்தில் பாதிக்கப்பட்டவர் மோசடி செய்பவருக்கு பணம் செலுத்தி ஏமாறுகிறார்.
மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி.?
இது போன்ற மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சைபர்கிரைம் கூடுதல் காவல்துறை இயக்குநர், திரு.சஞ்சய்குமார் அவர்கள் கூறுவதாவது:
1. சட்ட அமலாக்கதுறையினர் அல்லது அதிகாரிகள் எனக்கூறி அழைப்பவர்களின் அடையாளத்தை எப்போதும் சரிபார்க்கவும். அவர்களின் பெயர் மற்றும் அவர்கள் சார்ந்த துறையைக் கோரவும். பின்னர் அதிகாரப்பூர்வ தொடர்புகள் மூலம் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அவர்களின் அடையாளத்தை சுயமாக சரிபார்க்கவும்.
2. ஒரு குடும்ப உறுப்பினர் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி உங்களுக்கு அழைப்பு வந்தால், பீதி அல்லது பயத்திற்கு ஆளாகாமல் அமைதியாக இருக்கவும். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை இணங்கும்படி கையாளுகிறார்கள்.
3. ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் அல்லது தகவலை வழங்குவதற்கு முன், நம்பகத்திற்குரியதா என்பதை உறுதிப்படுத்தவும். சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் குடும்ப உறுப்பினரைத் தொடர்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பிடத்தைச் சரிபார்க்கவும்.
4. தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்கவோ அல்லது பணம் அனுப்ப வேண்டாம். நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர்கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப்பதிவு செய்யவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.