இன்று இரவு முதல் மீண்டும் ‘மழை விளையாட்டு’ ஆரம்பம்… எத்தனை நாட்களுக்கு இருக்கும்?

Nov 11, 2017, 4:33 PM IST



தமிழகத்தில் வடகிழக்கு பருமழையின் 2-வது சுற்று வட தமிழக கடற்கரைப்பகுதியில் இன்று இரவில் இருந்து தொடங்குகிறது என்று தி தமிழ்நாடு வெதர்மேன் எனக்கூறப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

நான் உங்களுக்கு அளிக்கும் இந்த வானிலை அறிக்கை என்பது அதிகாரப்பூர்வ அறிக்கை அல்ல. தயவு செய்து இந்திய வானிலை மையம் அறிவிக்கும் அறிவிப்பை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் ஏராளமான வரைபடங்களையும், விளக்கங்களையும் அளித்து பதிவு செய்துள்ளேன். வானிலை குறித்து அறிந்து கொள்ள விருப்பமாக இருந்தால், நீங்கள் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.

தீவிரமான பருவமழை என்பது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியோடு நெருங்கிய தொடர்பு உடையது. ஆதலால் மழை வந்தால் 4 நாட்கள் வரை நீடிக்கும். கடந்த முறை உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நமக்கு 9 நாட்கள் வரை மழையைக் கொடுத்தது.  இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மழை இன்றி, ஒரு சின்ன இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கியபின், 2-வது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இப்போது உருவாகி இருக்கிறது. இது வட தமிழக கடற்கரைப்பகுதியான நாகை முதல் சென்னை பெரும்பாலான இடங்களில் மழையைக் கொடுக்கும்.

தென் மேற்கு வங்கக் கடல்பகுதியில் 2-வது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது, அளவில் மிகப்பெரியதாக இருந்தபோதிலும், தீவிரம் குறைவாக இருக்கிறது. மிகப்பெரிய அளவில் மேகக்கூட்டங்கள் பரந்து கிடக்கின்றன.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்……

தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகினால், அதன் மூலம் எப்போதுமே வடதமிழக கடற்கரைப்பகுதிகளான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி, நாகை, திருவாரூர் மாவட்டங்கள்தான் பயன்பெறும்.

மேகக்கூட்டங்கள் தீவிரமாகப் பரவும்போது, சென்னை கடற்கரைப்பகுதியில் அதிகமான மழை இருக்கும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அதிகமான மழை எதிர்பார்க்க முடியாது, ஆங்காங்கே  ஒருசில இடங்களில் மட்டும்தான் மழை இருக்கும்.

குறைந்த காற்றழுத்த தாழ்நிலை எங்கே நகரும்?- ஆந்திரா நோக்கி நகரும் என்று பி.பி.சி. கூறுகிறது. சென்னையில் துளி மழைகூட இருக்காது என்கிறது. ஆனால், சென்னையில் எப்படி மழை பெய்யப்போகிறது என்பதை பார்க்கலாம்.

இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு நோக்கி, வடமேற்காக நகர்ந்து, வடதமிழக கடற்கரைப்பகுதிக்கு அருகே வரும். வடஇந்தியா  பகுதியில் இருந்து காற்று வீசுவதால், அதன் மூலம் உந்தப்பட்டு, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலப்பகுதிக்கு நகராமல், வடக்கு ஆந்திரா கடற்கரை, ஒடிசா கடற்கரையைக் கடந்து வலுவிழக்கும். இங்கிலாந்து வானிலை மாதிரியை அடிப்படையாகக் கொண்டு பி.பி.சி. இதை புயலாகக் கணித்து, ஆந்திராவின் வடபகுதியில் மழையின்றி கடக்கும் என்று கூறுகிறது. சென்னையைப் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்பது நகைப்புக்குரியது….

சென்னை மற்றும் வடதமிழகம்

இன்று இரவு முதல் மழை தொடங்கி, புதன்கிழமை வரை நீடிக்கலாம். அவ்வப்போது சின்ன சின்ன இடைவெளிகள் இருக்கும். சில நேரங்களில் கனமழைக்கும், மிக கனமழைக்கும் வாய்ப்புஉண்டு. குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் இருக்கும்.

உள்மாவட்டங்களான வேலூர், விழுப்புரம், மற்ற கடற்கரைப் பகுதிகளான கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டப் பகுதிகளிலும் மழை இருக்கும்.

சென்னையில் உள்ள அணைகளின் நீர்மட்டம்….

செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான அணைகளில் நீர் இருப்பு 40 சதவீதம் மட்டுமே இருக்கிறது. ஆதலால், ஆணைகளில், ஏரிகளில் நீர் இருப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம், அவ்வாறு வரும் புரளிகளையும்,வதந்திகளையும் நம்பாதீர்கள்.

அவ்வாறு ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக பேரிடர் மேலாண்மை அமைப்பையோ அல்லது உதவி எண்களையோ தொடர்பு கொண்டு பேசி தகவலை உறுதி செய்யுங்கள்.

கண்மூடித்தனமாக உங்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் செய்திகளை மற்றவர்களுக்கு அனுப்பாதீர்கள். இதன் மூலம் பெரும்பாலான வதந்திகள் பரவுவதை தவிர்க்கலாம். இதுபோன்ற புரளிகளையும் தயவு செய்து பரப்பாதீர்கள்.

உள்மாவட்டங்கள்…..

நவம்பர் 15-ந்தேதிக்கு பின், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்னையின் வடபகுதியை நோக்கி நகரும். காற்றின் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

மழை தொடங்கிய பின், அடுத்தடுத்து என்ன மாற்றங்கள் நிகழும், என்பது குறித்து தெரிவிக்க நான் இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..

மழை தொடங்கியவுடனே, நான் அது குறித்த பதிவுகளை உங்களுக்கு அளிப்பேன். எவ்வளவு நாட்கள் மழை இருக்கும்?, எந்த அளவுக்கு (கனமழையா, மிககனத்த, மிதமான) மழை பெய்யும்?, எந்தெந்த இடங்களில், நகரங்களில் மழை இருக்கும்? உள்ளிட்ட தகவல்களை நான் பதிவிடுகிறேன். ஆதலால், அச்சம் வேண்டாம். நாம் குடிநீர் பற்றாக்குறையின்றி அடுத்துவரும் மாதங்களுக்கு இருக்க, நமக்கு இன்னும் மழை பெய்ய வேண்டியது அவசியம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.