இலங்கை டான் அங்கொட லொக்கா விவகாரம்... டி.என்.ஏ டெஸ்டில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

By Narendran SFirst Published Nov 16, 2021, 10:13 AM IST
Highlights

கோவையில் உயிரிழந்த நபர், இலங்கை போதைப் பொருள் கடத்தல் மன்னனான அங்கொட லொக்காதான் என்பது டி.என்.ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த அங்கொட லொக்கா தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகவும், கோவையில் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கடந்த மாதம் தகவல்கள் வெளிவந்தன. ஆனால், இதுகுறித்து தமிழக காவல்துறையினர் உறுதி செய்யாமல் இருந்தனர். இந்த நிலையில், இலங்கையில் தேடப்பட்டுவரும் குற்றவாளி கோவையில் உயிரிழந்துள்ளதைக் கோவை மாநகர காவல்துறையினர் உறுதி செய்தனர். ஜூலை மாதம் 4 ஆம் தேதி கோவை நகரில் உள்ள பீளமேடு காவல்நிலையத்தில், சிவகாமி சுந்தரி என்பர், 35 வயதுடைய தனது உறவினர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும், அவரின் இறப்பு குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளார். உயிரிழந்த நபரின் பெயர் பிரதிப்சிங் என்றும், அவர் கோவையில் வசித்துவருவதாகவும் குறிப்பிட்டுருந்தார், சிவகாமி. இதற்கு ஆதாரமாக பிரதிப்சிங்கின் ஆதார் அட்டையையும் காவல்நிலையத்தில் சமர்பித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதேநாள், உயிரிழந்த நபரின் உடலை சிவகாமி மற்றும் அவரது கூட்டாளிகள் மதுரைக்கு எடுத்துச்சென்று, தகனம் செய்துள்ளனர். உயிரிழந்த நபரின் ஆதார் அட்டையைக் கோவை மாநகரக் காவல்துறையினர் ஆய்வு செய்ததில், அதில் உள்ள பெயர் போலியானது என தெரியவந்துள்ளது.

அத்தோடு, உயிரிழந்தவர் இலங்கையில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவரும் குற்றவாளி மதுமா சந்தனா லசந்தா பெரேரா என்கிற அங்கட லக்கா என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவையில் அங்கட லக்காவோடு கொழும்புவைச் சேர்ந்த 27 வயது பெண் ஆமானி தான்ஜி என்பவரும் வசித்து வந்தது கண்டறியப்பட்டது. இவ்வழக்கின் விசாரனையில், மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி மற்றும் அவருக்கு பழக்கமுள்ள ஈரோட்டைச் சேர்ந்த தியானேஷ்வரன் ஆகியோர் அங்கொட லொக்கா மற்றும் அமானி தான்ஜி ஆகியோரின் பெயர் மற்றும் நாட்டின் குடியுரிமையை மாற்றி மறைத்து ஆதார் அட்டை எடுக்கப் போலியான ஆவணங்களை அளித்ததும், போலி ஆதார் அட்டையை உண்மை என்று பயன்படுத்தி ஏமாற்ற உதவி செய்து வந்துள்ளதும் உறுதியானது. இதனையடுத்து, போலி ஆவணங்கள் தயார் செய்து பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்ததற்காகச் சிவகாமி சுந்தரி, அமானி தான்ஜி ஆகியோர் கோவையிலும், தியானேஷ்வரன் ஈரோட்டில் வைத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவா்களில், சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். அம்மானி தான்ஜி முகாமில் வைக்கப்பட்டுள்ளாா். அங்கொட லொக்கா, இந்தியாவில் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளை கோவை சி.பி.சி.ஐ.டி. காவலர்கள் தேடி வந்தனா். இந்நிலையில், அவா்கள் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து டி.எஸ்.பி. சிவகுமாா் தலைமையில் தனிப்படையினா் பெங்களூரு சென்றனா். பெங்களூரு, குள்ளப்பா சா்க்கிள் பகுதியில் பதுங்கியிருந்த, இலங்கை, அதுரகிரியாவைச் சோ்ந்த நலின் சதுரங்கா என்ற சனுக்கா தனநாயகா, பெங்களூரு, சுப்பையாபாளையத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோரை காவலர்கள் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரையும் கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், கோவையில் உயிரிழந்த நபர், இலங்கை போதைப் பொருள் கடத்தல் மன்னனான அங்கொட லொக்காதான் என்பது டி.என்.ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அங்கொட லொக்காவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மரபணுவும், இலங்கை அரசின் உதவியுடன் அங்கிருக்கும் அவரது தாயார் சந்திரிகாவின் மரபணுவும் பரிசோதனை செய்யப்பட்டதில், கோவையில் இறந்தது அங்கொட லொக்காதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

click me!