துணைவேந்தர்களை ராஜினாமா செய்யத் தூண்டும் அளவிற்கு பல்கலைக்கழகங்களில் நிலவும் கடும் நிதி நெருக்கடிகள் நிலவுவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
துணைவேந்தர்கள் ராஜினாமா
பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.குமார் அவர்கள், அண்மையில் தமிழக ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, சென்னைப் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் என தமிழகத்தில் இருக்கும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் கடும் நிதி நெருக்கடி நிலவிவருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன.
உறங்கும் உயர்கல்வி
பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் என அனைவருக்கும் மாத ஊதியம் கூட வழங்க இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு உரிய தீர்வு காண வேண்டிய அரசு, கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது கடும் கண்டனத்திற்குரியது. மாநிலப் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளை களைய உயர்கல்வித்துறையால் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவும் மாநில அரசைப் போலவே உறங்கிக் கொண்டிருப்பதன் விளைவாக, பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் துணைவேந்தர் ஒருவரே ராஜினாமா செய்யும் அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது.
நிதி நெருக்கடிக்கு தீர்வு
எனவே, சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்கிக் கொண்டிருக்கும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதோடு, மாநில அரசின் பொதுநிதியின் மூலமாகவே அனைத்து பல்கலைக்கழகங்களும் இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.