கோவையில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி மேயரின் வீட்டருகே பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கோவையில் குடிநீர் கேட்டு மக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் கோவை கணபதி, பூசாரிபாளையம் பகுதியில் 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வரவில்லை என்றும், மாநகராட்சி ஊழியர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
undefined
அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இந்தப் பகுதியில் கோவை மாநகராட்சி மேயர் குடியிருக்கும் வீடு உள்ளது. இதனை அடுத்து உடனடியாக தகவல் அறிந்து அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் இளங்கோ பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்பொழுது லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் லாரிகளில் வரும் குடிநீர் பணத்தை வாங்கிக் கொண்டு முக்கிய நபர்களுக்கு மட்டும் விநியோகிப்பார்கள். மேலும் அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் குடிநீருக்கு கட்டணம் வசூலிப்பார்கள். அதனால் குடிநீர் குழாய்கள் வழியாக மட்டும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.