இங்கிட்டு 103.. அங்கிட்டு 94… புதுச்சேரிக்கு படையெடுக்கும் மக்கள்…. எதற்காக தெரியுமா…?

By manimegalai aFirst Published Nov 6, 2021, 7:38 AM IST
Highlights

புதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைவு என்பதால் மக்கள் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு படையெடுக்க ஆரம்பித்து உள்ளனர்.

புதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைவு என்பதால் மக்கள் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு படையெடுக்க ஆரம்பித்து உள்ளனர்.

யாரும் எதிர்பார்க்காத தீபாவளி பரிசை மத்திய அரசானது கொடுத்துள்ளது. கடந்த பல மாதங்களாக மத்திய அரசை நோக்கி மாநில அரசானது குரல் கொடுத்து வந்த பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து அறிவித்தது.

மத்திய அரசின் இந்த தீபாவளி பரிசு மக்களை திக்குமுக்காட செய்தது. பொசுக்கென்று வெளியிடப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பை பல மாநிலங்களில் தீபாவளியை விட படு உற்சாகமாக கொண்டாடினர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து செலவு எக்கக்செக்கமாக எகிற, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்துக்கு போனது. விலைவாசி விண்ணில் பறக்க, நடுத்தர, ஏழை எளிய மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பு மக்களை ஏகத்துக்கும் சந்தோஷப்படுத்தியது.

விலை குறைப்பு அறிவிப்பு அமலுக்கு வந்ததால் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை சர்ரென்று குறைந்தது. தமிழகத்திலும் விலை குறைப்பு அமலானது. நவம்பர் 3ம் தேதி நிலவரப்படி புதுச்சேரியை ஒட்டியுள்ள கடலூர் மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 108 ரூபாய் ஆகவும், டீசல் விலையானது 104 ரூபாயாகவும் இருந்தது.

குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 109 தாண்டி அதிர வைத்தது. இங்கு சென்னையில் இருந்து எரி பொருள் கொண்டு வரப்படுவதால் போக்குவரத்து உள்ளிட்ட இதர செலவுகளை கணக்கிட்டு தமிழகத்தில் இங்கு தான் அதிக விலைக்கு எரிபொருள் விற்கப்படும்.

இப்போது மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் கடலூரில் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.98 காசுகளாகும். டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 93. 81 காசாக உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கடலூரை ஒட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலையை கேட்டால் மயக்கம் தான் வரும். வாட்வரியும் புதுச்சேரியில் குறைக்கப்பட இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல ரூ.94.99 காசுகளாக இருக்கிறது.

கடலூருக்கும், புதுச்சேரிக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் வித்தியாசம் மட்டும் தோராயமாக 9 ரூபாய். ஆகையால் கடலூரில் உள்ள இரு சக்கர வாகன ஓட்டிகள் அருகில் உள்ள புதுச்சேரிக்கு படையெடுத்தனர்.

செம குஷியாக தங்கள் வாகனங்களில் பெட்ரோலை முழு கொள்ளளவாக(full tank) நிரப்பி தள்ளினர். இரு சக்கர வாகனங்கள் மட்டும்தான் இல்லை…. 4 சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களும் புதுச்சேரிக்கு லைன் கட்டி பறந்தன.

வாகனங்களின் படையெடுப்பால் புதுச்சேரி திக்கி திணறியது. எந்த பக்கம் திரும்பினாலும் வாகனங்களின் அணி வகுப்பு காணப்பட்டது. நீண்ட வரிசையில் நின்ற வாகன ஓட்டிகள் பொறுமையாக பெட்ரோல், டீசலை நிரப்பினர்.

மத்திய அரசின் அறிவிப்புக்கு முன்பு, புதுச்சேரி யூனியனில் ஒரு லிட்டர் பெட்ரோல் என்பது கிட்டத்தட்ட 108 ரூபாயாக இருந்தது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பெரிய அளவு விலை வித்தியாசம் இல்லை. ஆனால் இப்போது நிலைமை வேறு என்பதால் கடலூர் To புதுச்சேரி சாலை வாகன ஓட்டிகளால் நிரம்பி வழிகிறது.

click me!