பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! இருவர் உயிருக்கு போராட்டம்! விசிகவினரை காப்பாற்ற துடிக்கும் காவல்துறை!

By vinoth kumar  |  First Published Jan 17, 2025, 10:02 PM IST

திருமால்பூரில் பாமகவினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெட்ரோல் குண்டு வீசியதில் இருவர் படுகாயம். கஞ்சா புழக்கம் மற்றும் சாதிவெறி தான் காரணம் என ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். 


இதுதொடர்பாக பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசித் தாக்கியதில் இருவர் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யாமல், பாதுகாக்க காவல்துறை முயன்று வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

Tap to resize

Latest Videos

நெமிலியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், சங்கர், விஜயகணபதி உள்ளிட்ட நால்வர்  கடந்த 16ஆம் தேதி திருமால்பூரில் உள்ள விளையாட்டுத் திடலில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பாமகவை சேர்ந்தவர்கள். அப்போது அங்கு வந்த திருமால்பூரைச் சேர்ந்த பிரேம், மணிகண்டன், கோபி, வெங்கடேசன், கீழ்வெண்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், தசரதன் ஆகிய விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 6 பேரும் அங்கு சென்று பா.ம.கவினரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளனர். உடனடியாக அங்கிருந்து ஓட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பெட்ரோலை ஊற்றி அனைவரையும் எரிக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் கூறியது அப்பட்டமான பொய்! நல்ல வழக்கறிஞர் உதவியுடன் படிச்சு பாருங்க! ராமதாஸ்!

அதன் பின் அங்கிருந்து சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சிறிது நேரத்தில் திரும்பி வந்து, பாமகவினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டுகள் தமிழரசன்,  விஜயகணபதி ஆகிய இருவர் மீது விழுந்து அவர்கள் உடல் முழுவதும் பெட்ரோல் பரவியது. அதனால், உயிருக்கு பயந்து அவர்கள் தப்பி ஓடிய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 6 பேரும் அவர்களை சுற்றி வளைத்து  தீ வைத்துள்ளனர். அதனால் படுகாயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர். 

பாட்டாளி மக்கள் கட்சியினர் மீதான இந்தக் கொடியத் தாக்குதலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் சாதிவெறியும், கட்டுப்படுத்தப்படாத கஞ்சாப் புழக்கமும் தான் காரணம் ஆகும். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாதி அடிப்படையில் வன்முறையில் ஈடுபடுவதும், தாக்குதல் நடத்துவதும் இது முதல் முறையல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நெல்வாய் கிராமத்திற்குள் புகுந்த அவர்கள், அங்கிருந்த மக்களின் சொத்துகளை சூறையாடினர். அதைக் கண்டித்து பா.ம.க. சார்பில் கடுமையான போராட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வந்தது. சில ஆண்டுகள் கட்டுக்குள் இருந்த அவர்களின் அட்டகாசம் இப்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது.

இதையும் படிங்க: காவல்துறையினர் செய்ததை மன்னிக்கவே முடியாது! இதற்கு அமைச்சர் பொன்முடி தான் காரணமா? அன்புமணி

திருமால்பூர் பகுதி உள்பட இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இத்தகைய வன்முறைகள் அடிக்கடி நடப்பதற்கு அங்கு கட்டுப்பாடில்லாமல் நடைபெறும் கஞ்சா வணிகமும் முக்கியக் காரணம் ஆகும். கஞ்சா வணிகத்தைக் கட்டுப்படுத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியும், போராட்டம் நடத்தியும் வருகிறது. ஆனால், கஞ்சா வணிகம் இன்று வரை கட்டுப்படுத்தப்படாமல் தொடருகிறது.

பா.ம.க.வினர் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கிய 6 பேரையும் கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டிய காவல்துறை, அவர்களில் பிரேம் உள்ளிட்ட இருவரை மட்டுமே கைது செய்துள்ளது.   மீதமுள்ள குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 6 பேரையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்.  தமிழ்நாடு முழுவதும் கஞ்சா வணிகத்தை ஒழிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடக்காத வகையில் சாதிவெறி சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

click me!