பாஜகவுடன் சமரசம் செய்து கொண்ட ஸ்டாலின்.! நிதியை பெற மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்.? எடப்பாடி

By Ajmal Khan  |  First Published Aug 28, 2024, 11:30 AM IST

மத்திய அரசு 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய முதல் தவணை நிதியை இதுவரை வழங்காததால், ஆசிரியர்களுக்கு சம்பளம், RTE மாணவர்களுக்கான கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை கண்டித்துள்ளார்.


நிதியை நிறுத்திய மத்திய அரசு

'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தனது பங்குத் தொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படியான  ஆண்டு மொத்த  செலவான ரூ.3586 கோடியை மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. அதன்படி தமிழகத்திற்கு மத்திய அரசு மொத்தம் ரூ.2152 கோடி வழங்க வேண்டும்.  அதில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.

Tap to resize

Latest Videos

நிதி நிறுத்திவைப்பு.! தமிழக அரசுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு.!

தம்பட்டம் அடிக்கும் ஸ்டாலின்

இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நிபந்தனைகளின் அடிப்படையில்தான் கல்வி வளர்ச்சிக்கு நிதி தரமுடியும் என்று கூறுவது ஏற்கக்கூடியதல்ல. சுமார் 20 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்குபெற்ற திமுக, தற்போதும் கனிசமான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கையில் வைத்திருக்கும் திமுக, மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்காமல், நீட் பிரச்சனையைப் போல, கல்விப் பிரச்சனையிலும் கபட நாடகம் ஆடுகிறது. 'ஒரே வார்த்தையில் அழைத்தோம் மத்திய ராணுவ அமைச்சர் நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதே போன்று, ஒரே வார்த்தையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட்டை ஒழிக்காததும் ஏன் ?

இரட்டை வேடம் திமுக

தன்னுடைய குடும்பப் பெருமையை ஊருக்குப் பறைசாற்ற மத்திய அமைச்சர்களை வருந்தி அழைத்து, பா.ஜ.க-வுடன் சமரசம் செய்துகொண்ட  ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? இரட்டை வேடம் போடும் திமுக-வும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள மாநில அரசுகளை மிரட்டும் பா.ஜ.க-வும் இணைந்து நடத்தும் நாடகங்களால் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

நிதியை உடனடியாக விடுவிக்கனும்

'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு முதல் தவணையை இதுவரை விடுவிக்காததால், சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையும், 'கல்வி உரிமைச் சட்டம்' (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிலையினைக் கருத்திற்கொண்டு. மத்திய அரசு உடனடியாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

விஜய் மீது நடவடிக்கை எடுங்கள்.! நாங்கள் சொல்லியும் கேட்கவே இல்லை- தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் புகார்

click me!