விஜய் மீது நடவடிக்கை எடுங்கள்.! நாங்கள் சொல்லியும் கேட்கவே இல்லை- தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் புகார்
தமிழகத்தில் புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், தனது கட்சிக் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தியதற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்களது தேசிய அடையாளமாக யானை சின்னத்தை பயன்படுத்தி வருவதாகவும், விஜய் தனது கட்சிக் கொடியில் இருந்து யானை சின்னத்தை அகற்ற வேண்டும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அரசியல் களத்தில் விஜய்
தமிழகத்தில் திமுக- அதிமுக 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஆட்சியை மாறி, மாறி பிடித்து வரும் நிலையில், இந்த கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் விஜய் அரசியல் களத்தில் குதித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என கட்சிக்கு பெயர் சூட்டியர் கட்சியின் கொடியையும் பாடலையும் வெளியிட்டார். அந்த வகையில் அடர்சிவப்பு, மஞ்சள் நிற பின்னணியில் 2 போர் யானைகள், வாகை மலர் ஆகியவை அக்கட்சி கொடியில் இடம்பெற்றுள்ளது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
யானை சின்னத்தை பயன்படுத்த எதிர்ப்பு
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலக செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மதி கொடுத்துள்ள புகாரில், எங்களுடைய பகுஜன் சமாஜ் கட்சியானது நமது தேசத்தின் அரசமைப்பு தந்தை பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறி மக்களின் நம்பிக்கையும் வாக்குகளையும் பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாகும் எங்களது தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும் தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம்.
தேர்தல் ஆணையத்தில் புகார்
நீலக் கொடியும் யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாகும் யானை சின்னமானது பாபாசாகிப் டாக்டர் அம்பேந்தர் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட்ட சின்னமாகும் யானை சின்னத்திற்க்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வு பூர்வமான வரலாற்று உறவு உள்ளது தற்போது தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் அவர்கள். தனது கொடியை அறிமுகம் செய்திருந்தார். அதில் எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம் பெற்றுள்ளது.
அரசியல் நாகரீகம் இல்லை
இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தனது எதிர்ப்பை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் அது குறித்து எந்த பதிலும் நடவடிக்கையும் நடிகர் விஜய் எடுக்காமல் இருக்கிறார் அரசியல் நாகரீகம் இல்லாமலும் சட்ட விரோதமாகவும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை தனது புதிய கட்சி கொடியில் பயன்படுத்தியிருக்கும் நடிகர் விஜய் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவர்தம் கொடியில் உள்ள எங்கள் யானை உருவத்தை அகற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க தாங்கள் வழி செய்ய வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.