60 வருடங்களாக தீபாவளி கொண்டாடாத 12 கிராமங்கள்; புத்தாடை, பட்டாசு கேட்டு குழந்தைகள் கூட அடம் பிடிப்பதில்லையாம்…

First Published Oct 18, 2017, 8:31 AM IST
Highlights
Diwali for over 60 years Even the kids do not have the footsteps of listening to fireworks ...


தமிழத்தின், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 கிராம மக்கள் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் உள்ளனர். அந்த கிராமங்களில் இருக்கும் குழந்தைகள் கூட புத்தாடையோ, பட்டாசோ கேட்டு அடம் பிடிப்பதில்லை என்று பெருமிதத்தோடு சொல்கின்றனர் அந்த கிராம மக்கள்.

இந்தியாவின் முக்கியமான சில விழாக்களில் தீபாவளியும் ஒன்று. இதனை அனைத்துத் தரப்பினரும் பாரபட்சமின்றி கொண்டாடுவது வழக்கம்.

தீபாவளி பண்டிகை நடைபெறும் தருணத்தில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலம். அதாவது அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை. இந்தப் பருவ காலத்தில்தான் தமிழகம் முழுவதும் விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெறும்.

அதன்படி, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், எஸ்.மாம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சத்திரப்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைப்பட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பைப்பட்டி, திருப்பதிபட்டி, வலையபட்டி, கச்சபட்டி, கழுங்குபட்டி, தோப்புபட்டி, இந்திரா நகர் ஆகிய 12 கிராமங்கள் உள்ளன.

இந்தக் கிராமங்களில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வாழும் மக்கள் விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பை மட்டுமே முக்கியத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 60 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வறட்சியினால் எஸ்.மாம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயப் பணி முடங்கும் நிலை ஏற்பட்டது. ஆனாலும், விவசாய பணியைத் துறக்க முடியாமல் தவித்த கிராம மக்கள், நிலச்சுவான்தாரர்களிடம் இருந்து பொருள்களைக் கடனாகப் பெற்று, விவசாயம் செய்தனர்.

விவசாயிகள் கடும் வறட்சியாலும், கடன் சுமையாலும் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் தீபாவளி பண்டிகை வந்துள்ளது. அந்த கிராமங்களில் ஒருபுறம் விவசாய பணி மும்முரமாக நடைபெற்ற நிலையில், அடுத்தடுத்த செலவுகளுக்கு கையில் பணமில்லாமல், அதற்கும் கடன் வாங்க வேண்டியிருந்த சூழ்நிலையில் விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.    

எனவே, விவசாயப் பணி பாதிக்கப்படாமலும், கிராம மக்களிடம் ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்ற நோக்கோடும், கிராமத்தின் பெரிய அம்பலகாரர் பெரி. சேவுகன் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு, இனிவரும் காலங்களில் 12 கிராம மக்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில்லை என முடிவு எடுத்தனர்.

இந்த முடிவை 60 வருடங்கள் கடந்த பின்னரும், எஸ்.மாம்பட்டி உள்ளிட்ட 12 கிராம மக்கள் இன்றுவரை தீபாவளி கொண்டாடாமல் உள்ளனர்.

இதுகுறித்து எஸ்.மாம்பட்டி கிராமத்தின் தற்போதைய பெரிய அம்பலகாரர் சே.சபாபதி (83) கூறியது:

“60 வருடங்களுக்கு முன்னர் பல்வேறு காரணங்களால் எஸ்.மாம்பட்டி உள்ளிட்ட 12 கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதை தவிர்த்தனர். அதனை இன்றுவரை பின்பற்றி வருகிறோம். இந்தப் பண்டிகைக்குப் பதிலாக, அறுவடை காலம் நிறைவடைந்த பின்னர் வரும் தமிழர் திருநாளான பொங்கல் விழாவை அனைத்து கிராம மக்களும் ஒன்றுகூடி, மூன்று நாள்கள் வெகுசிறப்பாக கொண்டாடி மகிழ்கிறோம்.

மேலும், திருமணமான புதுமணத் தம்பதியினரை தீபாவளி விருந்துக்கு அழைப்பதும், அனுப்புவதும் இல்லை. இதேபோன்று, எங்கள் ஊரிலிருந்து வேலை தேடி வெளியூருக்கு சென்றவர்களும், இதனை இன்னும் பின்பற்றுவர்.

அது மட்டுமின்றி, இதுவரை சிறுவர்கள் கூட தீபாவளி பண்டிகையின்போது புத்தாடை கேட்டும், பட்டாசுகள் கேட்டும் அடம்பிடிப்பதும் இல்லை. அவர்களும் எங்களோடு இணைந்து தீபாவளி பண்டிகையை தியாகம் செய்து வருகின்றனர்” என்று பெருமிதத்தோட தெரிவித்தனர்.

click me!