காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: டாஸ்மாக் சொன்ன கணக்கு - புதிய அறிக்கை கேட்ட நீதிமன்றம்!

By Manikanda PrabuFirst Published May 2, 2024, 8:25 PM IST
Highlights

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் வசூலிக்கப்பட்ட தொகை தொடர்பாக புதிய கணக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது

வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில், மலை பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில்களை கூடுதலாக ரூ.10க்கு விற்பனை செய்து, காலி மதுபாட்டில்களை திருப்பி தரும் போது, அந்த கூடுதலாக வசூலித்த ரூ.10யை திருப்பிக் கொடுக்கும், காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த திட்டம் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் முதலில் அமல்படுத்தப்பட்டது. பின்னர் மேலும் சில மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மொத்தம் 12 மாவட்டங்களில் காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் அமலில் உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கானது நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கி சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டம் குறித்து டாஸ்மாக் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “இந்த திட்டத்தின் மூலம் மதுபாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்தது மூலம், 306 கோடியே 32 லட்சத்து 25 ஆயிரத்து 330 ரூபாய் வசூலிக்கப்பட்டது. காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தவர்களுக்கு 297 கோடியே 12 லட்சத்து 61 ஆயிரத்து 280 ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 கோடியே 19 லட்சத்து 64 ஆயிரத்து 50 ரூபாய் தனி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.  கடந்த ஜனவரி மாதம் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட ஐந்து மாவட்டங்களில் காலி பாட்டிகள் திரும்ப பெறும் திட்டத்தில் சுமார் 12 கோடியே 62 லட்சம் ரூபாய் தனிக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.” என கூறப்பட்டிருந்தது.

ஆன்லைன் சூதாட்டம்: தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையில் உள்ள கணக்கில் தொகை விவரங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, தொகையை சரி பார்த்து மீண்டும் புதிய அறிக்கையை தாக்கல் செய்வதாக டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், தெளிவான புதிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடைகளில் ஏற்கனவே குவாட்டர் ஒன்றுக்கு ரூ.5 அல்லது ரூ.10 கூடுதலாக விற்கப்படுகிறது. இந்த காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தின் மூலம் ஏற்கனவே வசூலிக்கப்படும் தொகையை விட கூடுதலாக ரூ.10 அளிக்க வேண்டும். அதாவது, குவாட்டர் ஒன்றின் எம்.ஆர்.பி. விலை ரூ.140 என வைத்துக் கொள்வோம். தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் அந்த குவாட்டரை ரூ.150 கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. தற்போது இந்த காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தின் மூலம் அந்த குவாட்டரை ரூ.160 கொடுத்து வாங்க வேண்டும். மீண்டும் அந்த குவாட்டர் பாட்டிலை கடையில் ஒப்படைத்தால் நம்மிடம் கூடுதலாக வசூலித்த ரூ.20இல் ரூ.10ஐ மீண்டும் கொடுத்து விடுவார்கள். மீதமுள்ள ரூ.10க்கு வழக்கம்போல் கணக்கு கிடையாது. அது பெருமாள் கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

click me!