வெள்ளம் பாதித்த விவசாயிகளுக்கு அடுத்த இடி.. நாளைக்குள் பயிர்காப்பீட்டு பிரீமியம் செலுத்தியே ஆகணும்!!

By Narendran SFirst Published Nov 14, 2021, 7:08 PM IST
Highlights

சம்பா நெற்பயிரை நாளைக்குள் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனிடையே காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாகச் சுமார் 1.20 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. வாய்க்கால் மற்றும் ஏரிகள் முழுமையாகத் தூர்வாரப்படாத காரணத்தால் நீரோட்டம் தடைபட்டு மழைநீர் வயலுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த 50 சதவிகித நெற்கதிர்கள் சாய்ந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பா நடவுக்கான 1,500 ஏக்கர் நாற்றங்காலில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில் சம்பா நெற்பயிரை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வேளாண் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருவதாகவும் இதுவரை 20.95 இலட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு சுமார் 10 இலட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பா நெற்பயிருக்கான காப்பீடு தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாருர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 15 அன்றுடன் முடிவடைவதால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நாளை பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் முழுவீச்சில் இயங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் நாளைக்குள் பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி இத்திட்டத்தில் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை  உழவர் நலத்துறை கேட்டுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் கால அவகாசமின்றி, நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாமல் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் 1.20 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்கின்றனர். சம்பா நெல் சாகுபடி செய்து பயிர்கள் வளர்ந்து 15 நாட்களில் தொடர் மழையால் திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் வரை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இவற்றை மீட்க விவசாயிகள் சிரமப்படுகின்றனர். பயிர் காப்பீட்டிற்கான அடங்கல் சான்று பலர் பெறவில்லை. மேலும் கூட்டுறவு வங்கிகளில் காப்பீடு பதிவு பெயரளவில் செய்கின்றனர். இதனால் போதிய கால அவகாசமின்றி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் நவம்பர் 30 வரை காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

click me!