கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில், அவரின் விபரங்களை வெளியிட்ட 41 ‘யூடியூப்’ சேனல்கள் மீது, கோவை மாநகர போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையில் கடந்த வாரம் பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக 17 வயது மாணவி, கடந்த, 11ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
undefined
இந்த சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போக்சோ சட்டப்படி, பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் சிறுவர், சிறுமிகளின் விபரங்களை வெளியிடக்கூடாது என்பது சட்டமாகும்.
கோவை பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்தில், ஒரு சில யூடியூப் சேனல்கள் மாணவியின் புகைப்படம், அவர் படித்த பள்ளி, குடியிருந்த பகுதியின் விபரம், பெற்றோரின் புகைபடங்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை செய்தியாக வெளியிட்டன.போலீசாரின் எச்சரிக்கையை மீறி, பதிவுகளை நீக்காமாலும், தொடர்ந்து மாணவியின் சுய விபரங்களை யூடியூப் சேனல்கள் வெளியிட்டு வந்தன.
இதையடுத்து, விதிமீறி செயல்பட்ட 41 ‘யூடியூப்’ சேனல்கள் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 23(4) என்ற பிரிவின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இதன்மூலம், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் நடத்துவோருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.