திருச்சியை அடுத்த சஞ்சீவிராய பெருமாள் கோவில் சுற்றுச் சுவரை சுற்ற தடை !! போலீஸ் அதிரடி நடவடிக்கை !!!

First Published Oct 17, 2017, 7:45 PM IST
Highlights
Ban for thalaimalai temple girivalam


தலைமலை சஞ்சீவராய பெருமாள் கோவிலில் சுற்றுச் சுவரை நேர்த்திக் கனை செலுத்த சுற்றிய இளைஞர் ஒருவர் தவறி விழுந்து மரணமடைந்ததையடுத்து, சுவரை சுற்ற போலீசார் தடை விதித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையை அடுத்த அஞ்சலம் அருகே தலைமலையில் தலைமலை காப்புக்காட்டில் சுமார் 3,500 அடி உயரத்தில் சஞ்சீவிராய பெருமாள் கோயில் உள்ளது.

இது தலைமலை பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் நீலியாம்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் செவந்திப்பட்டி, பவுத்திரம் ஆகிய அடிவார கிராமங்களில் இருந்து செல்லலாம்.

திருமணத் தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும் பக்தர்கள் சனிக்கிழமைகளில் இந்த மலைக்கோயிலுக்கு செல்வார்கள். குறிப்பாக, புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.



அவ்வாறு வரும் பக்தர்கள், மலை உச்சியில் உள்ள பெருமாள் கோயிலின் வெளிப்புறச் சுவரைப் பிடித்தபடி உள்ளங்கை அகலத்தில் உள்ள கட்டுமானத்தில் நடந்து சென்று கிரிவலம் சென்று வேண்டிக்கொள்வது வழக்கம். இக்கோயிலின் மேலே இருந்து கீழே பார்த்தாலே மயக்கம் வந்துவிடும் என்று பலரும் கூறுவர். எனினும் இந்தப் பகுதியை ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சுற்றிவருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 14- ஆறுமுகம் என்பவர் கிரிவலம் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி 3500 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். இதனால் அந்த சுற்றுச்சுவரை சுற்றுவது ஆபத்தானது. அதை தடுக்க வேண்டும். பக்தர்களை கிரிவலத்திற்கு அனுமதிக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், சஞ்சீவிராய பொருமாள் கோவில் சுற்றுச்சுவரை சுற்றி வர போலீசார் தடைவிதித்துள்ளனர். இதுகுறித்து விளக்கமான பதாகை ஒன்றும் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கையால் பக்தர்கள் இனிமேல் கிரிவலம் செல்ல இயலாது.

 

click me!