’வெறும் உடம்புதானே... இதற்காக வெட்கப்படக் கூடாது..!’ பொள்ளாச்சி வீடியோ விவகாரத்தில் வைரலாகும் இளம்பெண்ணின் பதிவு..!

By Thiraviaraj RMFirst Published Mar 12, 2019, 2:12 PM IST
Highlights

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. 
 

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. 

பாதிக்கப்பட்டதில் தங்கள் வீட்டு பெண்களும் இருப்பார்களோ என பதறியடித்துக் கொண்டிருக்கின்றனர் பெற்றோர்கள். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் இச்சம்பவத்தில் இருந்து மீண்டுவர பெற்றோராக நாம் எப்படி இதை கையாள வேண்டும் என்பதைகோவையில் வசிக்கும் இளம்பெண்ணான நர்மதா மூர்த்தி தனது முகநூலில் தெளிவாகப் பதிவிட்டுள்ளார். 

நர்மதாவின் தாயார் அவருடன் தொலைபேசி வாயிலாக உரையாடல் வடிவில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த மோசமான சம்பவம் தொடர்பாக செய்தி வெளியானபோது, பாரம்பரியமான ‘கோயம்புத்தூர் குடும்பத்தைச்’ சேர்ந்த பெண்ணான எனக்கு என் குடும்பத்தாரிடம் இருந்து, “ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லாதே, அது பாதுகாப்பானது அல்ல” என்பது போன்ற வழக்கமான அறிவுரைகள் அடங்கிய போன் கால்கள் மட்டுமே வரும் என்று எதிர்பார்த்திருந்தேன்.

ஆனால், என் எண்ணத்திற்கு மாறாக என்னிடம் பேசிய என் அம்மா இப்படி கூறினார்! “நீ வெளியில் தங்கி இருக்கிறாய். உன்னை ஒரு வலிமையான, உறுதியான பெண்ணாக வளர்த்துள்ளதாகவே நம்புகிறேன்! எந்த நிலையிலும், உன் தந்தையும், நானும் உனக்கு பக்கபலமாய் இருப்போம்! யாரேனும் உனது படங்களையோ, வீடியோவையோ வைத்து மிரட்டல் விடுத்தால், எதற்கும் கவலைப்படாமல் ‘உன்னால் முடிந்ததை செய்துகொள்’ எனக் கூறிவிடு. ஏனெனில், இந்த உலகத்திலுள்ள எல்லா பெண்களுக்கும் இருப்பதுபோன்ற வெறும் உடல்தான் இது. இதற்காக வெட்கப்பட ஏதுமில்லை!

ஒருவேளை இதுபோன்ற ஏதேனும் பிரச்னைகள் வந்தால் அதை எதிர்கொள்ள ஒரு பெற்றோராக நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம்! உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” என என் அம்மா என்னிடம் பேசிய போது, எனக்கு அவரை கட்டிக் கொண்டு அழவேண்டும் போல இருந்தது! இத்தகைய நம்பிக்கையும், பாதுகாப்புமே ஒரு குடும்பம் உங்களுக்கு கொடுக்க வேண்டிய விலைமதிப்பில்லாத ஒன்று.

எதுவாய் இருந்தாலும் பரவாயில்லை தைரியமான பெண்ணாக இருங்கள். பெற்றோர்களே உங்களுடைய குழந்தைகளுக்கு உறுதுணையாக இருங்கள். உங்களின் ஆதரவைவிட அவர்களுக்கு வேறெதும் வலிமையாக இருந்துவிட முடியாது.” என அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

click me!