கோவை மாவட்டம் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா அரசு பேருந்தை சிறை பிடித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள மாநிலம் அட்டப்பாடி அடுத்த கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிபதி என்ற இடத்தில் கேரளா அரசு 5 அடி உயரத்தில் தடுப்பணை கட்டி 90 சதவீத பணிகள் முடித்துள்ளது. மேலும் இரண்டு தடுப்பணைகளை கட்டவும் கேரள அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிறுவாணி அணையில் மழை காலங்களில் முழு கொள்ளளவான 52 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க விடாமல் கேரளா அரசு தடுத்து வருகிறது.
இந்த நிலையில் கோடை காலத்தில் வரக்கூடிய தண்ணீரையும் சிறுவாணி அணைக்கு வராமல் தற்போது தடுப்பணைகளை கட்டி வரும் கேரளா அரசை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கேரள அரசு பேருந்தை சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக காந்திபுரம் அரசு விரைவு பேருந்து நிலையம் முன்பாக திரண்ட தபெதிக, மதிமுக, காங்கிரஸ், தமுமுக, எஸ்டிபிஐ உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 70 க்கும் மேற்பட்டோர் கேரள அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
நாகர்கோவில் அருகே கால்வாயில் அரசு பேருந்து கவிழ்ந்து 3பேர் படுகாயம்
தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு புறப்பட தயாராக இருந்த கேரள அரசு பேருந்தை மறித்து பேருந்தின் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூரில் பிறந்து 3 நாட்களேயான ஆண் குழந்தை கடத்தல்; உதவி செய்வது போல் நடித்து பெண் கைவரிசை
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் கு.ராமகிருஷ்ணன், ஏற்கனவே கேரளா அரசு சிறுவாணி அணையின் முழு கொள்ளளவில் தண்ணீர் நிரம்ப விடாமல் தடுத்து வருகிறது. தற்போது இந்த தடுப்பணையை முழுவதுமாக கட்டி முடித்தால் சிறுவாணி அணைக்கு நீர் வரத்து என்பதே இருக்காது. கேரள அரசின் இந்த நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
கேரளா அரசு தொடர்ந்து அணை கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அடுத்த கட்டமாக கேரள எல்லையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். இந்தப் போராட்டத்திற்கு திமுக, கம்யூனிஸ்டுகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.