கோவை பாராளுமன்ற தொகுதிக்கு வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவையில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வெற்றி உறுதியாகி விட்டது. அண்ணாமலையின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என்பதற்காக திமுக எதையும் செய்வதற்கு துணிந்து விட்டது.
மாநில அரசு கையில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் துணையுடன் அதிகார அத்துமீறலில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். இரவு 10 மணிக்குள் தனது பிரசாரத்தை முடித்துவிட்டு, வாகனத்தில் வந்த அண்ணாமலை மீது, வேண்டுமென்றே இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது கடும் கண்டனத்திற்குரியது. அதுமட்டுமல்லாது மே 17 இயக்கம் போன்ற தங்களது அடியாள் கூட்டத்தை அனுப்பி பாஜகவினர் மீது தகராறு செய்து பிரச்னையை உருவாக்கி வருகின்றனர். வாக்குப் பதிவுக்கு முன்பு பாஜக நிர்வாகிகளை கைது செய்யும் மாபெரும் சதித் திட்டத்துடன் திமுகவினர் செயல்பட்டுள்ளனர். மக்கள் ஆதரவுடன் அண்ணாமலையை வீழ்த்த முடியாது என்பதால் குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றனர்.
திமுக நிர்வாகிகள் போல செயல்படும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். கோவை தொகுதிக்கு வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். மக்கள் அனைத்தையும் பார்த்துக கொண்டிருக்கிரார்கள். திமுகவினர் அட்டூழியங்களுக்கு இத்தேர்தலில் முடிவு கட்டுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.