திமுகவுக்கு விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பும் உத்வேகம் பாஜகவுக்கு மட்டும்தான் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜக வேட்பாளர்களை ஆதாரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வேலூர் மக்களவைத் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும், பாஜக கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கடுமையாக சாடினார். மேலும், தமிழகத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமோக ஆதரவு இருப்பதாகவும், மீண்டும் மோடி அரசு வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் கூறுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
undefined
வேலூர் பிரசாரக் கூட்டத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை மேட்டுப்பாளையம் சென்றார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, பா.ஜ.க. வேட்பாளர்கள் எல்.முருகன் (நீலகிரி), அண்ணாமலை (கோவை), கே.வசந்தராஜன் (பொள்ளாச்சி), ஏ.பி.முருகானந்தம் (திருப்பூர்), கே.பி.ராமலிங்கம் (நாமக்கல்), த.மா.கா. வேட்பாளர் பி.விஜயகுமார் (ஈரோடு), பா.ம.க. வேட்பாளர் ந.அண்ணாதுரை (சேலம்) ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
என் அன்பான தமிழ் சகோதர சகோதரிகளே என தமிழில் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ள பகுதிக்கு வருவது ஒரு டீக்கடைக்காரருக்கு மகிழ்ச்சியாக இருக்காதா என்ன? என்றார். அதற்கு அங்கு கூடியிருந்த கூட்டம் கரவோசம் எழுப்பியது. கொங்கு மண்டலம் பாஜகவுக்கு எப்போதுமே சிறப்பு என்ற அவர், அடல் பிஹாரி வாய்பாய் காலத்தில் இந்த பகுதி மக்கள்தான் தமிழகத்தில் இருந்து எம்.பி.யை தேர்ந்தெடுத்து அனுப்புனீர்கள் என்றார்.
“தமிழ்நாட்டில் போகிற பக்கம் எல்லாம் பாஜகவின் ஆதிக்கம் தெரிகிறது. திமுகவுக்கு விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பும் உத்வேகம் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மட்டும்தான் உள்ளது என மொத்த தமிழகமும் சொல்கிறது. மீண்டும் மோடி வர வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் சொல்கிறது.” என பிரதமர் மோடி கூறினார்.
ஒட்டுமொத்த தமிழ்நாடும் மீண்டும் மோடி அரசு வேண்டும் என்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!
“திமுக, காங்கிரஸ் ஆகிய வாரிசு கட்சிகளுக்கு எப்படியாவது பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள். இப்படி சொல்லி இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அவர்கள், வறுமையை ஒழிப்போம் என்பார்கள். ஆனால், நாட்டில் இருந்து வறுமை நீங்கவில்லை. நமது தேசிய ஜனநாயகக் கூட்டனி ஆட்சிக்கு வந்ததும், 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்.” என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
ஏழைகள், தலித், பட்டியலின மக்களுக்கு காங்கிரஸ், திமுக எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் கோடிக்கணக்கான மக்களுக்கு வீடுகளை வழங்கியுள்ளது. ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கியுள்ளது. இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
முதன்முறையாக பட்டியலின பெண்ணை இந்தியாவின் குடியரசுத் தலைவராக்கி அழகு பார்த்தது பாஜக அரசு என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். கொரோனாவுக்கு இந்தியாவில் மருந்து தயாரிப்போம் என்றபோது, எதிர்க்கட்சிகள் கிண்டலடித்தன. ஆனால், அதனை சாதித்துக் காட்டி உலக நாடுகளுக்கும் கொரோனா மருந்து கொடுத்தோம் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏராளமான திறமைகள், மனித ஆற்றல் உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, அதனை திமுக அரசு வீணடித்துக் கொண்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். கோவை பகுதியில் ஜவுளித் தொழில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதனை காப்பாற்ற வேண்டிய திமுக அரசு, அதனை முடக்கி வருகிறது. மின்கட்டணத்தை உயர்த்தி வருகிறது எனவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
திமுக எப்போதும் வெறுப்பு அரசியலை செய்து கொண்டிருக்கிறது. அக்கட்சியின் கவனம் தமிழகத்தின் வளர்ச்சி மீது இருந்ததில்லை. ஆனால், நான் உங்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியமைத்ததும் கோவை பகுதிக்கும், நீலகிரி பகுதிக்கும், கொங்கு மண்டலத்துக்கும் இன்னும் வேகம் காட்டி சிறப்பாக செயல்படுகிறேன் என உறுதியளிக்கிறேன். இது மோடியின் கேரண்டி என கூறி பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.