கோவையில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நகை பறிப்பு திருடர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு மாநகரில் பல்வேறு இடங்களில் சாதாரண உடையில் ரோந்து சென்று கண்காணித்து வந்தனர்.
அப்போது டவுன் ஹாலில், 3 பெண்கள் ஓடி சென்று ஆட்டோவில் ஏறி செல்வதை காவல் துறையினர் பார்த்தனர். அந்த ஆட்டோ போக்குவரத்து நெரிசலுக்கு இடையே வேகமாக சென்றதால் அவர்களால் உடனே பிடிக்க முடியவில்லை. பின் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமிராக்களை ஆய்வு செய்து அந்த ஆட்டோவின் எண்ணை கைப்பற்றினர். ஆட்டோவின் விவரங்களை சேகரித்து ஓட்டுநரிடம் விசாரித்தனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் அந்த, 3 பெண்களை அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டதாகவும், 100 ரூபாய் வாடகைக்கு, 200 ரூபாய் தந்ததாகவும் தெரிவித்தார்.
ஸ்டைலிஷ் தமிழச்சியாக மேடையில் மிளிர்ந்த குஷ்பு, வெட்கப்பட்ட வானதி சீனிவாசன்
இதை தொடர்ந்து காவல் துறையினர் அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த பெண்கள் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒரு பையை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததும், அங்கு ஒரு வாலிபரிடம் போனை வாங்கி பேசி, பேருந்தில் ஏறி சென்றதும் பதிவாகி இருந்தது. பின் காவல் துறையினர் அந்த பெண்களிடம் போனை கொடுத்த நபரை கேமிராவில் கண்காணித்தனர்.
அப்போது அந்த கும்பல் கோவை மருதமலைக்கு வந்திருந்தது தெரிந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று கோவிலில் இருந்த 3 பெண்களையும், அவர்களுக்கு திட்டம் தீட்டி கொடுத்த ஒருவரையும் மடக்கி பிடித்து வெரைட்டி ஹால் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் பரமக்குடியைச் சேர்ந்த ரவி, அவரது மனைவி பழனியம்மாள், உறவினர்கள் வனிதா, நதியா, ஆகியோர் என்பது தெரிந்தது.
பள்ளி மாணவியை கடத்திச் சென்று வன்கொடுமை செய்த ஆசிரியர்; 30 ஆண்டுகள் சிறை விதித்து உத்தரவு
அதில், ரவி அவர்களை வழி நடத்தி வந்ததும், 3 பெண்கள் அவரது வழிகாட்டுதலின் படி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ், கோவில், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தும் உள்ளனர். இதையடுத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 50 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கும்பல்
கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல், மாதத்தில் 30 நாட்களில், 20 நாட்கள் திருட்டிலும், 10 நாட்கள் சுற்றுலாவும் சென்று வந்து உள்ளனர். சுற்றுலாவின் போது நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உள்ளனர். கணவன், மனைவியான ரவி, பழனியம்மாள், காஷ்மீர், டெல்லி, மும்பை என இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்து உள்ளனர். நகை திருடும் முன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது அவர்கள் வழக்கமாக வைத்து இருந்தனர். அவர்கள் திருடிய பணத்தில் பெங்களூரில் 5 கோடி ரூபாயில் வீடு, விலை உயர்ந்த கார் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளனர். அவர்களின் குழந்தைகள் மருத்துவர் மற்றும் பொறியியல் படித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.