கோவை மாவட்டம் அன்னூர் அருகே கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5 வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள பிள்ளைப்பம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமின்றி ஏராளமான வடமாநில தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் நிறுவனத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து குழுவாக வங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாதவ் (வயது 23), தனஞ்ஜெய்(24), தரம் பீர்(35), வீரேந்தர்(36), அனுராக்(26) ஆகிய 5 பேரும் ஒன்றாக தங்கியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அறையிலேயே சமைத்துள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த கேஸ் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அன்னூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். மேலும்,படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து அன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு வட மாநில தொழிலாளர்கள் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் சக தொழிலாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.