பாரீஸ் ஒலிம்பிக் 2024 துப்பாக்கிச் சுடுதல் ஆண்களுக்கான டிராப் பிரிவில் தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளார்.
பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கடந்த 26ஆம் தேதி முதல் தொடக்க விழாவுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, பளுதூக்குதல், மல்யுத்தம் என்று 16 விளையாட்டுகளில் பங்கேற்று வருகிறது. ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 13 தமிழக வீரர்கள் உள்பட 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.
இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த சரப்ஜோத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
undefined
இதுவரையில் இந்தியா மகளிர் ஒற்றையர் பிரிவு 10மீ ஏர் பிஸ்டல் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவிற்காக மனு பாக்கர் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று கொடுத்துள்ளார். இந்த நிலையில் தான் துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான டிராப் பிரிவில் தமிழக வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் கலந்து கொண்டு விளையாடினார். முதல் நாள் தகுதிச் சுற்றின் முடிவில் 68 புள்ளிகளுடன் 30ஆவது இடத்தில் இருந்த தொண்டைமான் 2ஆவது நாள் போட்டியை இன்று தொடங்கினார்.
இன்று நடைபெற்ற 4ஆவது சுற்றில் 25 டிராப்களை சுட்டு வீழ்த்தினார். அதோடு புள்ளிப்பட்டியலில் 25ஆவது இடங்களுக்கு சென்றார். இதே போன்று கடைசி டிராப்களையும் சுட்டு வீழ்த்தினார். எனினும், 5 சுற்றுகள் முடிவில் 118 புள்ளிகளுடன் 21ஆவது இடம் பிடித்த அவரால் இறுதி போட்டிக்கான பதக்க வாய்ப்பு சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். ஆனால், தொண்டைமான் 21ஆவது இடம் பிடித்த நிலையில் பதக்க வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறினார்.