நான் பார்த்ததுலயே இதுதான் படுமோசமான டீம்!! தெறிக்கவிட்ட முன்னாள் ஜாம்பவான்

By karthikeyan VFirst Published Nov 27, 2018, 3:52 PM IST
Highlights

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் முன்னெப்போதையும்விட மிகவும் வலுவாக இருப்பது இந்திய அணிக்கு பலம். அத்துடன் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது இந்திய அணிக்கு கூடுதல் பலம். 
 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் உலகின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக ஆடிவரும் இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 அணியாக இருந்தும் வெளிநாடுகளில் தொடர்ந்து தோல்வியை தழுவிவருகிறது. தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழந்த இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்துவதில் தீவிரமாக உள்ளது. 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் முன்னெப்போதையும்விட மிகவும் வலுவாக இருப்பது இந்திய அணிக்கு பலம். அத்துடன் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது இந்திய அணிக்கு கூடுதல் பலம். 

ஸ்மித்தும் வார்னரும் இல்லாமல் புதிய கேப்டனின் கீழ் திணறிவரும் ஆஸ்திரேலிய அணி, அணியை மறுகட்டமைத்து வருகிறது. இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. எனவே இந்தியாவுக்கு எதிராக வெல்லும் முனைப்பில் அந்த அணியும் தீவிரமாக உள்ளது. ஆனால் அந்த அணியின் அண்மைக்கால ஆட்டம் இந்திய அணியை வீழ்த்துமளவிற்கு இல்லை என்பதுதான் உண்மை. எனினும் கிரிக்கெட்டை பொறுத்தவரை போட்டி நடக்கும் அன்றைய தினத்தின் ஆட்டம்தான் போட்டியின் முடிவை தீர்மானிக்கும்.

இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ள நிலையில், இந்த தொடர் குறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணன், ஆஸ்திரேலிய தொடரை 3-1 என இந்திய அணி வெல்லும் என நம்புகிறேன். ஆஸ்திரேலியாவுக்கான எந்த சூழலும் அந்த அணிக்கு சாதகமாக இருப்பதாக தெரியவில்லை. அந்த அணியில் ஸ்மித்தும் வார்னரும் இல்லாததால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நான் இப்படி கூறுவதால் இந்திய அணியை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தமில்லை. 

நான் பார்த்தவரையில் மிகவும் பலவீனமான ஆஸ்திரேலிய அணி இதுதான். 1999ம் ஆண்டு நான் அறிமுகமானதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான். அப்போதைய வீரர்கள் எல்லாம் தலைசிறந்த வீரர்கள். விக்கெட்டுகள் சரிந்தாலும் யாராவது ஒரு வீரர் நிலைத்து நின்று அணியை வெற்றி பெற செய்யக்கூடிய திறமை படைத்தவர்கள். அப்படித்தான் அவர்கள் சொந்த மண்ணிற்கு அப்பாற்பட்டு வெளிநாட்டிலும் வெற்றிகளை குவித்தார்கள்.

அந்தளவிற்கு நம்பிக்கையுடன் ஆடும் திறமை பெற்றவர்கள். ஆனால் இப்போதைய ஆஸ்திரேலிய அணியில் அந்த நம்பிக்கையையும் திறமையையும் நான் பார்க்கவில்லை. அதனால்தான் நான் பார்த்ததிலேயே இதுதான் பலவீனமான ஆஸ்திரேலிய அணி என்று கூறுகிறேன். 

விராட் கோலிக்கு மட்டும் இது முக்கியமான பயணம் அல்ல. இந்திய அணிக்கும் கூட இது மிக முக்கியமான தொடர். வெளிநாட்டிலும் தொடரை வெல்ல முடியும் என்று நிரூபிக்க இது நல்ல வாய்ப்பு. அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள், திறமையான பந்துவீச்சாளர்கள் ஒருங்கே கிடைத்துள்ளனர். எனவே இந்த வாய்ப்புகளை தவறவிட்டுவிடாமல் ஆஸ்திரேலிய அணியை அதன் மண்ணில் வீழ்த்தி வரலாறு படைக்க வேண்டும் என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார். 
 

click me!