அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி பர்பிள் கேப் பெற்றிருந்த ஜஸ்ப்ரித் பும்ரா அந்த இளம் ரசிகருக்கு பரிசாக கொடுத்து, ஆட்டோகிராஃப் போட்டுள்ளார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்று விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் ஹாட்ரிக் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் 4ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதே போன்று ஆர்சிபிக்கு எதிரான போட்டியிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு தோல்வி, வெற்றி, கடைசி 3 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவியது. நேற்று லக்னோ ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 48ஆவது லீக் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவியது.
That kid now has a core memory for life 🥹💙 | pic.twitter.com/CcS1tdjYzB
— Mumbai Indians (@mipaltan)
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் குவித்தது. இதில், நேஹல் வதேரா அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் 35 ரன்கள் எடுத்தார். இதையடுத்து பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 10 போட்டிகளில் 3ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. எஞ்சிய 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மொத்தமாக 14 புள்ளிகள் பெறும். அப்படியிருந்தும் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாது. இதுவரையில் விளையாடிய 10 போட்டிகளில் ஜஸ்ப்ரித் பும்ரா 14 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரருக்கான பர்பிள் கேப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தான் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ஜஸ்ப்ரித் பும்ரா தனது பர்பிள் கேப்பை இளம் ரசிகருக்கு பரிசாக கொடுத்துள்ளார். மேலும், அவருக்கு ஆட்டோகிராஃப்பும் போட்டு கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எஞ்சிய 4 போட்டிகள் முறையே:
மே 03: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – வான்கடே மைதானம்
மே 06: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – வான்கடே மைதானம்
மே 11: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஈடன் கார்டன் மைதானம்
மே 17: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – வான்கடே மைதானம்