ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில், மேலும், அவரது பதவிக்காலத்தை நீட்டிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ராகுல் டிராவிட்டிற்கு முன், இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்பட்டார். அதில், கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் அவரது பதவிக் காலம் முடிந்தது. இதையடுத்து 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதில், ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியானது, டி20 உலகக் கோப்பை 2022, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023, ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர்களை இழந்தது. ஆனால், ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்திய அணி சாம்பியனானது. நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருடன் ராகுல் டிராவிட்டின் 2 ஆண்டுகள் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
இதன் காரணமாக தற்போது டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்பட்டு வருகிறார். அடுத்து இந்திய அணிக்கான பயிற்சியாளர் தேடலில் பிசிசிஐ இறங்கியது. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ராவிடம், இந்திய அணியின் பயிற்சியாளருக்காக பேசப்பட்டுள்ளது. ஆனால், நெஹ்ரா மறுப்பு தெரிவிக்கவே, மீண்டும் ராகுல் டிராவிட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.
அப்போது, தனது கவனம் முழுவதும் உலகக் கோப்பை தொடர் மீது மட்டுமே இருந்தது. ஆதலால் எதிர்காலம் பற்றி யோசிக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார். வரும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர், 2025 ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் டிராபி தொடர் என்று அடுத்தடுத்து நடகக் உள்ள நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை தொடர விரும்பியுள்ளது.
புதிய பயிற்சியாளர் கொண்டு வரப்பட்டால் இப்போது இருக்கும் சூழல் அப்படியே இருக்கும்மோ, இருக்காதோ? இதனால், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட்டை தொடர பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆனால், எப்போது வரையில் என்று அறிவிக்கப்படவில்லை. டிராவி மட்டுமின்றி அவரது சப்போர்ட்டிங் ஊழியர்களான விக்ரம் ரத்தோர் (பேட்டிங் பயிற்சியாளர்), பராஸ் மம்ப்ரே (பந்துவீச்சு பயிற்சியாளர்) மற்றும் டி திலீப் (பீல்டிங் பயிற்சியாளர்) ஆகியோருக்கான விதிமுறைகளையும் பிசிசிஐ நீட்டித்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடர் வரையில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியுடன் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.