தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸின் அதிரடியால் 43 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 245 ரன்கள் குவித்தது.
நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 15ஆவது லீக் போட்டி தற்போது தரமசாலா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது. டாஸ் போடுவதற்கு முன்னதாக ஈரமான அவுட்பீல்டு மற்றும் லேசான மழை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக போடப்பட்டது.
SA vs NED: மழையால் ஓவர்கள் குறைப்பு – அடித்து ஆட முயற்சித்து ஆட்டமிழக்கும் நெதர்லாந்து வீரர்கள்!
அதன் பிறகு மீண்டும் மழை பெய்யத் தொடங்கிய நிலையில் போட்டியானது 43 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டு 4 மணிக்கு தொடங்கப்பட்டது. இதையடுத்து விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓடவுட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக ஆட முயற்சித்து ஆட்டமிழந்தனர். விக்ரம்ஜித் சிங் 2 ரன்னிலும், மேக்ஸ் ஓ டவுட் 18 ரன்னிலும், அடுத்து வந்த கொலின் அக்கர்மேன் 13 ரன்னிலும், பாஸ் டி லீட் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் நெதர்லாந்து 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 19 ரன்னிலும், தேஜா நிடமானுரு 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இவருடன் இணைந்து ரோலோஃப் வான் டெர் மெர்வே ஓரளவு ரன்கள் சேர்த்தார். அவர் 29 ரன்களில் வெளியேறினார். கடைசியாக வந்த ஆர்யன் தத் 9 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 23 ரன்கள் குவித்தார். ஸ்கார் எட்வர்ட்ஸ் 69 பந்துகளில் 10 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 78 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடைசி 6 ஓவர்களில் நெதர்லாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் குவித்தது. இறுதியாக நெதர்லாந்து 43 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் லுங்கி நிகிடி, மார்கோ ஜான்சென், கஜிசோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். கெரால்டு கோட்ஸி மற்றும் கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.