லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிபால் டைகர்ஸ் அணி சாம்பியனானது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சீசன் தொடங்கியது. இதில், 4 அணிகள் இடம் பெற்று விளையாடின. இந்த சீசனில் வேர்ல்டு ஜெயிண்ட்ஸ் அணி சாம்பியனானது. இதையடுத்து இந்த சீசனுக்கான போட்டியானது கடந்த நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. இதில், புதிதாக அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சௌதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் இடம் பெற்று விளையாடின. அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த தொடரில் மணிப்பால் டைகர்ஸ், இந்தியா கேபிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், பில்வாரா கிங்ஸ், சௌதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ், அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் இடம் பெற்று விளையாடின. இதில், சௌதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் பில்வாரா கிங்ஸ் ஆகிய 2 அணிகள் எலிமினேட் செய்யப்பட்டன. இதையடுத்து, புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த மணிபால், அர்பன்ரைசர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், இந்தியா கேபிடல்ஸ் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.
WPL 2024 Auction: ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 5 வீராங்கனைகள்!
இதையடுத்து நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மணிபால் டைகர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அடுத்து நடந்த எலிமினேட்டர் போட்டியில் இந்தியா கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், இந்தியா கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
அதன் பிறகு நடந்த 2ஆவது எலிமினேட்டர் சுற்று போட்டியில் இந்தியா கேபிடல்ஸ் மற்றும் மணிபால் டைகர்ஸ் அணிகள் மோதின. இதில், மணிபால் டைகர்ஸ் அணியானது, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிபால் டைகர்ஸ் அணிகள் மோதின.
இதில் மணிபால் டைகர்ஸ் அணி முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது. இதில், ரிக்கி கிளார்க் அதிரடியாக விளையாடி 80 ரன்கள் குவித்தார். அவர் 52 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 80 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று, குர்கீரத் சிங் 36 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் கடின இலக்கை துரத்திய மணிபால் டைகர்ஸ் அணியில் ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 40 ரன்கள் குவித்தார். அசேல குணரத்னே 29 பந்துகளில் 5 சிக்ஸ் உள்பட 51 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மணிபால் டைகர்ஸ் அணியானது 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியனானது.