சிஎஸ்கேவிற்கு எதிரான முதல் போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது முழங்காலில் காயமடைந்த கேன் வில்லியம்சன், ஐபிஎல் 16வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். வில்லியம்சனின் விலகல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பின்னடைவாக அமையும்.
ஐபிஎல் 16வது சீசன் நேற்று தொடங்கியது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியில் சிஎஸ்கேவும் குஜராத் டைட்டன்ஸும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடியான பேட்டிங்கால்(50 பந்தில் 92 ரன்கள்) 20 ஓவரில் 178 ரன்கள் அடித்தது. அதிரடியாக ஆடி சதத்தை நெருங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்து 8 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
179 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி, கடைசி ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கியது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்தபோது குஜராத் டைட்டன்ஸ் வீரர் கேன் வில்லியம்சன் முழங்காலில் காயமடைந்தார். அதனால் அவரால் தொடர்ந்து ஃபீல்டிங் செய்யவும் முடியவில்லை. 2வது இன்னிங்ஸில் வில்லியம்சன் பேட்டிங்கும் செய்யவில்லை.
இந்நிலையில், முழங்கால் காயத்தால் அவரால் இந்த சீசனில் தொடர்ந்து ஆடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார் வில்லியம்சன். கடந்த சீசனில் முதல் முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் அணியின் பலத்தை வலுப்படுத்தும் விதமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கழட்டிவிட்ட சீனியர் வீரரும், சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
IPL 2023: சிஎஸ்கே அணியின் பலங்கள் & பலவீனங்கள்..! ஓர் அலசல்
களத்தில் அவரது இருப்பு, ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன்சியில் உதவிகரமாக இருந்திருக்கும். ஆனால் இப்போது அவர் ஆடமுடியாததால் அது குஜராத் அணிக்கு பின்னடைவாக அமையும்.