வங்கதேச அணிக்கு எதிரான உலகக் கோப்பையின் 17ஆவது லீக் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 17ஆவது லீக் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது. இதில், லிட்டன் தாஸ் 66 ரன்னிலும், தன்ஷித் ஹசன் 51 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக மஹ்முதுல்லா 46 ரன்கள் குவித்தார்.
IND vs BAN: சிக்ஸர் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் 26000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை!
பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு வழக்கம் போன்று ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். ரோகித் சர்மா பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார். ஒரு கட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா 40 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு விராட் கோலி களமிறங்கினார்.
ஒரு புறம் சுப்மன் கில் தனது முதல் உலகக் கோப்பையில் 2ஆவது போட்டியில் முதல் அரைசதம் அடித்துள்ளார். அவர் 53 ரன்களில் ஆட்டமிழந்து 14 ரன்களில் 2000 ரன்களை கடக்கும் சாதனையை கோட்டைவிட்டார். அதன் பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர் அடிக்க முயற்சித்து 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து கேஎல் ராகுல் களமிறங்கினார். கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து நிதானமாக ரன்கள் சேர்த்தனர்.
இதில் விராட் கோலிக்கு வீசப்பட்ட நோபாலில் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். இந்தப் போட்டியை 25,923 ரன்களுடன் தொடங்கிய விராட் கோலி இந்தப் போட்டியில் 80 ரன்கள் சேர்த்ததன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் 26003 ரன்களை கடந்த 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், அதிவேகமாக (576 இன்னிங்ஸ்) 26000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 601 இன்னிங்ஸ் விளையாடி 26000 ரன்களை கடந்துள்ளார். மேலுன், 80 ரன்களிலிருந்து அப்படியே சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்தார். கடைசியாக சிக்ஸர் அடித்து ஒரு நாள் போட்டிகளில் 48ஆவது சதத்தை பூர்த்தி செய்து, இந்திய அணியையும் வெற்றி பெறச் செய்துள்ளார்.
இறுதியாக விராட் கோலி 97 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 103 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். மேலும், கேஎல் ராகுல் 34 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். இதன் மூலமாக இந்தியா 41.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக வங்கதேச அணிக்கு எதிராக உலகக் கோப்பையில் 4ஆவது வெற்றியை பெற்றுள்ளது.
215 கிமீ வேகத்தில் பறந்த ரோகித் சர்மா – 3 முறை வேகத்தை அளக்கும் கருவியில் சிக்கி அபராதம் விதிப்பு!
மேலும், 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா தொடர்ந்து 4ஆவது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. ஆனால், ரன் ரேட்டில் பின்தங்கியுள்ளது. நியூசிலாந்து அணியும் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதையடுத்து வரும் 22ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 21ஆவது லீக் போட்டி தரம்சாலா மைதானத்தில் நடக்க இருக்கிறது.