வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை அடித்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 17ஆவது லீக் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது. இதில், லிட்டன் தாஸ் 66 ரன்னிலும், தன்ஷித் ஹசன் 51 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக மஹ்முதுல்லா 46 ரன்கள் குவித்தார்.
பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு வழக்கம் போன்று ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். ரோகித் சர்மா பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார். ஒரு கட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா 40 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு விராட் கோலி களமிறங்கினார்.
ஒரு புறம் பவுண்டரியும், சிக்ஸருமாக சுப்மன் கில் அடிக்கும் போதெல்லாம் சாரா டெண்டுல்கர் கை தட்டி உற்சாகப்படுத்தினார். அதன் பிறகு உலகக் கோப்பையில் சுப்மன் கில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த போது அவருக்கு எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தார். கில் 55 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உள்பட 53 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், அவர் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை கோட்டைவிட்டுள்ளார்.
இதுவரையில் 36 ஒரு நாள் போட்டி இன்னிங்ஸ்களில் விளையாடி சுப்மன் கில் 1933 ரன்கள் குவித்திருந்தார். இந்தப் போட்டியில் அவர் 67 ரன்கள் எடுத்தால் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஹசீம் ஆம்லாவின் சாதனையை முறியடித்திருப்பார். இதற்கு முன்னதாக ஆம்லா 40 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் முதல் போட்டிக்கு முன்னதாக சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த போது விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்திருந்தார். ஏற்கனவே சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியை சாரா டெண்டுல்கர் பார்க்க வந்தது கூட சுப்மன் கில்லிற்காகத்தான் என்று கூறப்படுகிறது.
உலகக் கோப்பையில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பார்ட்னர்ஷிப்பில் வங்கதேச அணி புதிய சாதனை!
டெங்கு காய்ச்சல் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சுப்மன் கில் விளையாடவில்லை. மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடி 16 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.