ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயார் காலமானதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு ஸ்டீவ் ஸ்மித் தான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா வந்த ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடியது. இதில், 2 போட்டியில் இந்தியாவும், ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் ஜெயிக்க ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இதன் காரணமாக 4 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றி தொடரை கைப்பற்றியது. முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையில் களமிறங்கியது.
அந்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, 3வது டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சியில் ஜெயித்தது. 2வது டெஸ்ட் முடிந்ததும், தாயாரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து பேட் கம்மின்ஸ் நாடு திரும்பினர். ஆதலால், ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார். அதுமட்டுமின்றி 4ஆவது டெஸ்ட் போட்டிக்கும் அவர் தான் கேப்டனாகவும் இருந்தார். இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.
4ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாளின் போது பேட் கம்மின்ஸின் தாயார் காலமானார். இதையடுத்து, ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது இரங்கலை தெரிவிக்கும் வகையில் கையில் கறுப்பு நிற பட்டை அணிந்து விளையாடினர். இந்த நிலையில், தனது தாயார் மறைவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலேயே இருக்கும் பேட் கம்மின்ஸ் இந்தியாவிற்கு திரும்பவில்லை. இதனால், இந்தியாவிற்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலியா, ஒரு நாள் தொடரை கண்டிப்பாக கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இதனால், இந்தியாவிற்கு ஃபைட் கொடுக்கும் வகையில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறியிருப்பதாவது: பேட் கம்மின்ஸ் இனி இந்தியாவிற்கு திரும்பி வரமாட்டார். வீட்டில் என்ன நடந்தது என்பதை அவர் இன்னும் கவனித்துக் கொண்டிருக்கிறார், எங்கள் எண்ணங்கள் பேட் கம்மின்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த துக்க செயல் முறையை கடந்து செல்லும்போது அவர்களிடம் உள்ளன என்று கூறினார்.
மேலும், கம்மின்ஸ் இல்லாததால் அவருக்குப் பதிலாக டெஸ்ட் போட்டியை வழி நடத்தினார். அவருக்குப் பதில் வேறு சரியான ஆட்கள் இல்லை. ஏற்கனவே ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். நாதன் எல்லீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சீன் அப்பாட் ஏற்கனவே அணியில் இடம் பெற்றுள்ளார். டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரும் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளனர். தற்போது அணியில் அதிகமாக ஆல் ரவுண்டர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரேயடியாக அணியில் இடம் பெறுவார்களாக என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
ஒரு நாள் தொடர் - ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), சீன் அப்பாட், அஷ்டன் அகர், நாதன் எல்லிஸ், கேமரூன் க்ரீன், டிரேவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஸ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோயினிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17 ஆம் தேதி மும்பை வாங்கடே மைதானத்தில் நடக்கிறது.
மார்ச் 17 - இந்தியா - ஆஸ்திரேலியா - முதல் ஒரு நாள் போட்டி - மும்பை - பிற்பகல் 1.30
மார்ச் 19 - இந்தியா - ஆஸ்திரேலியா - 2ஆவது ஒரு நாள் போட்டி - விசாகப்பட்டினம் - பிற்பகல் 1.30
மார்ச் 22 - இந்தியா - ஆஸ்திரேலியா - 3ஆவது ஒரு நாள் போட்டி - சென்னை - பிற்பகல் 1.30