நெதர்லாந்திற்கு எதிரான 24ஆவது லீக் போட்டியில் சதம் அடித்த டேவிட் வார்னர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் 6 சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 24 ஆவது லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்துள்ளார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக கேமரூன் க்ரீன் இடம் பெற்றுள்ளார். ஆனால், நெதர்லாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசல்வுட், ஆடம் ஜம்பா.
நெதர்லாந்து:
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிதமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ரோலாஃப் வான் டெர் மெர்வெ, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.
இதையடுத்து டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் மார்ஷ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 71 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த மார்னஷ் லபுஷேன் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரரான வார்னர் இந்த உலகக் கோப்பையில் தனது 2ஆவது சதம் அடித்தார். மேலும், ஒரு நாள் போட்டிகளில் 22அவது சதத்தை பதிவு செய்தார்.
இதுதவிர உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளார். இன்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக உலகக் கோப்பைகளில் 6 சதங்கள் அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் ரோகித் சர்மாவின் சதங்கள் (7) சாதனையை சமன் செய்வார். மேலும், சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த ஆக்டிவ் வீரர்களில் டேவிட் வார்னர் 48 சதங்கள் (451 இன்னிங்ஸ்) 2ஆவது இடத்தில் உள்ளார். விராட் கோலி 78 சதங்கள் (568 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார்.
உலகக் கோப்பையில் அதிக சதங்கள்:
ரோகித் சர்மா – 7 (22 இன்னிங்ஸ்)
சச்சின் டெண்டுல்கர் – 6 (44 இன்னிங்ஸ்)
டேவிட் வார்னர் – 6 (23 இன்னிங்ஸ்)
ரிக்கி பாண்டிங் – 5
குமார் சங்கக்காரா – 5
உலகக் கோப்பையில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்தவர்கள்:
மார்க் வாக் – 2 (1996)
ரிக்கி பாண்டிங் – 2 (2003-07)
மேத்யூ வாடன் – 2 (2007)
டேவிட் வார்னர் – 2 (2023)
இந்த உலகக் கோப்பைகளில் இதுவரையில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் எடுத்துள்ள ரன்கள் முறையே 41, 13, 11, 163, 104 என்று மொத்தமாக 332 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலமாக இதுவரையில் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி 3ஆவது இடம் பிடித்துள்ளார். ரோகித் சர்மா 311 ரன்களுடனும், விராட் கோலி 354 ரன்களுடனும், குயீண்டன் டி காக் 407 ரன்களுடன் முதலிடத்திலும் உள்ளனர்.
குறைவான இன்னிங்ஸ்களில் (153 இன்னிங்ஸ்) விளையாடி 22 சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரோகித் சர்மா 188 இன்னிங்ஸ் விளையாடி 22 சதங்கள் அடித்துள்ளார். கடைசியாக டேவிட் வார்னர் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். சதம் அடித்த மகிழ்ச்சியில் வழக்கம் போல் புஷ்பா ஸ்டைலில் தனது சதம் சாதனையை கொண்டாடியுள்ளார்.
David Warner has started his hunt in World Cup......!!!! pic.twitter.com/H4JxN4kE29
— Johns. (@CricCrazyJohns)