வீதியில் இழுத்துவிட்ட கங்கை அமரன் - "யாருக்கும் ஆதரவில்லை..." எரிச்சலில் ரஜினி

First Published Mar 23, 2017, 10:32 AM IST
Highlights
no support to anyone rajini tweet going viral


ரஜினி தனக்கு பிரச்சாரம் செய்ய போகிறார் என்று, ரஜினியை சந்தித்த பின் பாஜக வேட்பாளர் கங்கைஅமரன் பகிரங்கமாக பேட்டி அளித்ததால், எரிச்சல் அடைந்த ரஜினி, தான் யாருக்கும் ஆதரவில்லை என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில், நடிகர் ரஜினிகாந்த், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கும் பங்காற்றியவர். 1991 - 96களில் ஜெயலலிதா ஆட்சியின் மீது பொதுமக்கள் கடும் கோபம் கொண்டிருந்தனர்.

அப்போது, ஜெயலலிதாவுடன் மோதலில் ஈடுபட்ட ரஜினி, திமுக மற்றும் காங்கிரசில் இருந்து பிரிந்து வந்த தமாகாவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். அன்று பகிரங்கமாக ரஜினி வாய்ஸ் கொடுத்ததால், திமுக - தமாகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக படுதோல்வி அடைந்தது.

இதை தொடர்ந்து, 1998 நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி மீண்டும், திமுக கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார். ஆனால், அந்த தேர்தலில் அதிமுக அதிக எம்பி தொகுதிகளை கைப்பற்றியது.

அதன்பின்னர், ஜெயலலிதாவுடன் சமாதானமான ரஜினி, தனது மகள் திருமணத்தையே, ஜெயலலிதா தாலி எடுத்து கொடுத்து நடத்தும் அளவுக்கு நெருக்கம் ஆனார்.

இதையடுத்து அரசியலில், யாரையும் எதிரியாக பார்க்காமல், அனைத்து கட்சிகளுடன் ரஜினி, நெருக்கத்தை வளர்த்து கொண்டார்.

ரஜினி தனிக்கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள், காத்துக்கிடக்க, தன்னுடைய திரைப்படம் வெளியாகும் நேரத்தில் மட்டும், மேடையில் தோன்றி அரசியல் பேசிய அவர், இதுவரை ரசிகர்களுக்கு புதிராகவே இருக்கிறார்.

மத்தியில் உள்ள பாஜகவினருக்கு நெருக்கமாக இருக்கும் ரஜினி, அதை அவர்களுக்கு ஆதரவு பிரச்சாரமாக மாற்ற தயாராக இல்லை. பாஜக தலைவர்கள் பலரும், அழைப்பு விடுத்தும் ரஜினி அரசியலை விட்டு ஒதுங்கியே இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஆர்கே நகர் சட்டமன்ற இடை தேர்தலில், இசையமைப்பாளர் கங்கை அமரன் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கங்கை அமரனை மரியாதை நிமித்தமாக, தனது வீட்டுககு அழைத்து ரஜினி வாழ்த்தினார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட கங்கை அமரன், ரஜினி தனக்கு பிரச்சாரம் செய்ய போகிறார் என்ற பொருள்படும் படி, “இது வெறும் டிரைலர்தான். மெயின் பிச்சர் இனிமே தான் இருக்கு” என்று பேட்டி அளித்து இருந்தார்.

இந்த பேட்டி ஆர்கே நகரில் போட்டியிடும் திமுக மற்றும் அதிமுக இரு அணிகளையும் எரிச்சல் அடைய செய்தது. ரஜினிக்கு நெருக்கமான திமுக தலைவர்கள் இதை நேரடியாக ரஜினியின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த ரஜினி, இந்த சங்கடத்தை தவிர்க்க, இன்று அதிரடியாக தனது டுவிட்டர் பக்கத்தில், தான் யாருக்கும் ஆதரவில்லை என்று தெரிவித்து, கங்கை அமரன் முகத்தில் கரியை பூசியுள்ளார்.

ரஜினி பிரச்சாரத்துக்கு வருவார் என்ற கங்கை அமரன் பேட்டியால், உற்சாகத்தில் இருந்த பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

click me!