இதெல்லாம் ரொம்ப ஒவருங்க! பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாய் 3 மடங்கு உயருகிறது! ஓபிஎஸ் சொன்ன அதிர்ச்சி!

By vinoth kumarFirst Published May 7, 2024, 12:19 PM IST
Highlights

 திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே பொதுமக்கள் மீது எப்படி எப்படியெல்லாம் வரி வசூலிக்கலாம் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 

முத்திரை மற்றும் பதிவுக் கட்டணத்தை அநியாயமாக ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பது என்பது கொடுமையிலும் கொடுமை என ஓபிஎஸ் கூறியுள்ளார்.  

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே பொதுமக்கள் மீது எப்படி எப்படியெல்லாம் வரி வசூலிக்கலாம் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. திமுக அரசின் இந்த மக்கள் விரோத குறிக்கோள் காரணமாக சொந்த வீடு வாங்கும் மக்களின் கனவு சிதைக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு மதிப்பீடு நியாயமாக நிர்ணயிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அதனை உயர்த்திய திமுக அரசு, தற்போது அதனை மேலும் உயர்த்தும் வழிப்பறிக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

வெளிச்சந்தையில் சொத்துக்களின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி, அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு வழிகாட்டி மதிப்பு குறித்த பரிந்துரையை அளிக்கும் வரை, 08-06-2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக பதிவுக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியது. இதன்படி, வழிகாட்டி மதிப்பு 33 விழுக்காடு உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, வீடு வாங்குபவர்கள் கூடுதல் நிதிச் சுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.  

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பேசிக், பிரீமியம், அல்ட்ரா பிரீமியம் என மூன்று வகைகளாக வீடுகள் பிரிக்கப்பட்டு, மேலும் மூன்று மடங்கு நிதிச் சுமையை மக்கள்மீது திணிக்க திமுக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த முறை கைவிடப்பட்டு, தெரு வாரியாக வீடுகளுக்கான மதிப்பு நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் தருணத்தில் 08-06-2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.  இந்த நீதிமன்றத் தடையையும் மீறி பொதுமக்களிடம் இருந்து பதிவுக் கட்டணம்
வசூலிக்கப்பட்டது. இது நீதிமன்ற அவமதிப்பாகும்.

இதற்கிடையில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் மற்றும் இதர வீடுகளுக்கு தெரு வாரியாக கூட்டு மதிப்பினை நிர்ணயம் செய்தது தமிழ்நாடு அரசு. ஆனால், எந்தத் தெருவுக்கு எவ்வளவு வழிகாட்டி மதிப்பு என்பதை பதிவுத் துறை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மாறாக, வீட்டினை வாங்குபவர்கள் அல்லது கட்டுமான நிறுவனங்கள் அந்தத் தெருவுக்கு உள்ள வழிகாட்டி மதிப்பினை தொடர்புடைய சார் பதிவாளரிடம் நேரில் சென்று கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவ்வாறு சார் பதிவாளரிடம் நேரில் சென்று வீடு வாங்குபவர்கள் அல்லது கட்டுமான நிறுவனங்கள் விசாரித்தபோது, 08-06-2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பை விட உயர்வாக இருந்தது தெரிய வந்தது. மேலும், இந்த வழிகாட்டி மதிப்பு என்பது அடுக்குமாடி குடியிருப்பின் மொத்த அளவுக்கு ஒரே பத்திரமாக பதிவு செய்யப்படுகிறது. பிரிபடா பாகத்திற்கு தனிப் பத்திரம், அடுக்குமாடி குடியிருப்பின் அளவுக்கு தனிப் பத்திரம் என்ற நடைமுறை கைவிடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் கூடுதல் சுமைக்கு தள்ளப்பட்டனர். இந்த முறை காரணமாக, வீடு வாங்கும் ஒவ்வொருவரும், வீட்டின் அளவை பொறுத்து, குறைந்தபட்சம் 2 இலட்சம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் 10 இலட்சம் ரூபாய் வரை கூடுதலாக முத்திரை மற்றும் பதிவுக் கட்டணம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டை வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. வங்கி, வங்கியாக அலைந்து திரிந்து, கடன் பெற்று, வீட்டை வாங்கி, அதற்கான உள் வேலைகளை செய்து, கடனுக்கு மாதாந்திர தவணை கட்டி மக்கள் அல்லலுற்று இருக்கின்ற நிலையில், முத்திரை மற்றும் பதிவுக் கட்டணத்தை அநியாயமாக, ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பது என்பது கொடுமையிலும் கொடுமை. முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்திற்கு தனிக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, சந்தை மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதை சுட்டிக்காட்டி, தற்போதுள்ள பத்திரப் பதிவு வருவாயான சுமார் 20,000 கோடி ரூபாயினை 60,000 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தத் தேவையான நில வழிகாட்டி மதிப்புகளை பரிந்துரைக்குமாறு சார் பதிவாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசின் இந்தச் செயல்பாட்டினைப் பார்க்கும்போது, கொடுங்கோல் அரசன் வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் போன்றவன் என்கின்ற திருக்குறள் தான் நினைவிற்கு வருகிறது.

மக்களை அரவணைத்துப் பேணிக் காக்கும் அரசனை உலகம் வணங்கும் என்ற திருக்குறளுக்கேற்ப, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபோது என்ன வழிகாட்டி மதிப்பு இருந்ததோ அதே மதிப்பினை தொடர்ந்து கடைபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் அவர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

click me!