3வது கட்ட மக்களவைத் தேர்தல்: 12 மாநிலங்களில் 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

By SG Balan  |  First Published May 6, 2024, 9:00 AM IST

நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடக்கவிருக்கும் 93 தொகுதிகளில் 2019ஆம் ஆண்டில் 75 இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிள் வெற்றி பெற்றிருந்தன.


மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடைந்தது. முதல் இரண்டு கட்டங்களில் வாக்குப்பதிவ சதவீதம் 2019ஆம் ஆண்டை விட குறைவாக உள்ள நிலையில் மூன்றாம் கட்டத்தில் இந்தப் போக்கு மாறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குஜராத்தில் உள்ள சூரத்தில் பாஜக ஏற்கெனவே போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக்-ரஜோரி தொகுதிக்கான தேர்தல் மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பெதுல் தொகுதியில் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத்தில் நடைபெறவிருந்த வாக்குப்பதிவு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணமடைந்ததை அடுத்து மே 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

இந்தத் தேர்தல் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கான தேர்தல் என்றும் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான தேர்தல் என்றும் ராகுல் காந்தி பேசினார். பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி மக்களின் உரிமைகளை பறிக்க முயல்வதாகவும் ராகுல் காந்தி கூறினார். தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால், அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவோம் என்று பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் பிற்படுத்தப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது என்று சாடிய ராகுல் காந்தி, இட ஒதுக்கீட்டையே பாஜக ஒழிக்க நினைக்கிறது என்றும் விமர்சித்தார்.

400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறப் போகிறோம் என்று கூறிய பாஜக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்குக் கொடுத்துவிடுவார்கள் என்று மோடி பேசினார். வாக்கு வங்கி அரசியலுக்காக பெண்களின் தாலியைக் கூட பறித்துவிடுவார்கள் எனவும் மோடி குற்றம்சாட்டினார்.

நாளை தேர்தல் நடக்கவிருக்கும் 93 தொகுதிகளில் 2019ஆம் ஆண்டில் 75 இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிள் வெற்றி பெற்றிருந்தன.

செவ்வாய்கிழமை நடைபெறும் மூன்றாம் கட்டத் தேர்தலுடன் 280 தொகுதிகளுக்கு மேல் வாக்குப்பதிவு முடிந்துவிடும். அதாவது மொத்த தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகள் தேர்தல் முடிந்திருக்கும். குஜராத்தில் சூரத் தவிர மீதமுள்ள 25 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் மீதமுள்ள 7 இடங்களிலும், கர்நாடகாவில் மீதமுள்ள 14 இடங்களிலும் நாளை தேர்தல் நடக்கிறது. இதன் மூலம் இந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடையும். ஏற்கெனவே ராஜஸ்தான், கேரளா மற்றும் தமிழகத்திலும் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.

அஸ்ஸாமில் 4, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 7, மத்தியப் பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, உத்தரப் பிரதேசத்தில் 10, மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சில முக்கிய தொகுதிகள்:

உள்துறை அமைச்சர் அமித் ஷா காந்திநகரில் போட்டியிடுகிறார். பாராமதிநில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே அவரது மருமகன் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரை எதிர்த்துப் போட்டி போடுகிறார். மத்தியப் பிரதேசத்தில் விதிஷா தொகுதியில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. குணா தொகுதியில் ஜோதிராதித்ய சிந்தியா, தர்வாட்டில் பிரலாத் ஜோஷி, ஹவேரியில் பசவ்ராஜ் பொம்மை மற்றும் துப்ரி தொகுதியில் பத்ருதீன் அஜ்மல் ஆகியோர் களம் கண்டுள்ளனர்.

click me!