கர்நாடகாவில் காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை!

By Manikanda PrabuFirst Published May 5, 2024, 3:41 PM IST
Highlights

கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. கடந்த மாதம் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவும், 89 தொகுதிகளுக்கு 26ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்த நிலையில், வருகிற 7ஆம் தேதி 94 மக்களவைத் தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் 14 தொகுதிகளுக்கு ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்து விட்டது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறவுள்ளது.

இந்த நிலையில், கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெலகாவியில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா ஆகியோர் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சித்தராமையா, “இன்று மாலையுடன் மக்களவைத் தேர்தல் 2024க்கான பிரசாரம் முடிவடைகிறது. மே ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, முதற்கட்ட தேர்தலில் 8-9 இடங்களில் வெற்றி பெறுவோம். இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். மாநிலத்தில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். நாங்கள் ஏற்கனவே அறிவித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதால் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்றார்.

இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் புதிய ரூபாய் நோட்டை வெளியிடும் நேபாளம்!

“மாநிலத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் குறைந்தது 20 தொகுதிகளில் எங்கள் கட்சி வெற்றி பெறும். ஏனென்றால் சட்டப்பேரவைத் தேர்தலின்போது நாங்கள் அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறோம். அதனால், எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நலத்திட்ட பயன்கள் அனைத்தும் என் மூலமும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மூலமும் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் நேரடியாக சென்று சேர்கிறது.” என முதல்வர் சித்தராமையா கூறினார்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்பை மாற்றுவோம் என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறி வருகிறார்கள் என குற்றம் சாட்டிய சித்தராமையா, பாஜகவுக்கு ஒருபோதும் அரசியல் அமைப்பின் மீது மரியாதை இருந்தது இல்லை. அதனால் தான் நாங்கள் இந்த மக்களவைத் தேர்தலை இரண்டாவது சுதந்திர போர் என்று நாங்கள் கூறுகிறோம் என்றார்.

click me!