மத்திய அரசு - நீதித்துறை இடையே மோதல்?

First Published Nov 27, 2016, 9:35 AM IST
Highlights


நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படும் சட்டத்தை தள்ளுபடி செய்யும் அதிகாரம் நீதித்துறைக்கு உள்ளதென உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கூறியுள்ளதற்கு, மத்திய சட்டத்துறை அமைச்சர் எதிர்மறையாக கருத்து தொிவித்துள்ளாா். இதனால் உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாக்கியுள்ளது.

டெல்லியில் உச்சநீதிமன்ற வளாகத்தில் அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டது. இதில், பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், அரசின் எந்த ஒரு அமைப்பும் தனது எல்லைக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றார். நீதிமன்ற விவகாரத்திற்கு உட்பட்ட எந்த விஷயத்தையும் கண்காணிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அரசியலமைப்பு விதிகளுக்கு எதிராக அமைந்தாலோ அல்லது சட்டம் வழங்கியுள்ள எல்லைகளை தாண்டி செயல்பட்டாலோ, நாடாளுமன்றம் உருவாக்கும் எந்த சட்டத்தையும் தள்ளுபடி செய்யும் அதிகாரம், நீதித்துறைக்கு உள்ளதாகவும் தலைமை நீதிபதி டி.எஸ் தாக்கூர் தனது பேச்சில் குறிப்பிட்டார். 

யாரும் லட்சுமண ரேகையை தாண்டக் கூடாது என்றும், இதனை கடந்து செயல்பட்டால், அவர்களை நீதித்துறை கண்காணிக்கும் என்று குறிப்பிட்ட அவா், நாடு முழுவதும் 500 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது மற்றும் தீர்ப்பாயங்களில் அரசின் தலையீடு குறித்தும் வேதனை தெரிவித்தார்.

ரவிசங்கா் பிரசாத் பதிலடி:

இந்நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அவரச  காலங்களில் உச்சநீதிமன்றம் உரிய தீரத்துடன் செயல்படவில்லை என குறிப்பிட்டார். 

அவசரச் சட்டம் அமலான காலத்தில், நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்பட்டன என்றும், ஆனால் உச்சநீதிமன்றம் அவ்வாறு செயல்படவில்லை என்றும் குறிப்பிட்டு பேசினார். நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தில் இருந்து தான் முரண்படுவதாக கூறிய ரவிசங்கர் பிரசாத், இந்த ஆண்டு மட்டும், காலிப்பணியிடங்களுக்கு 120 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட நடவடிக்கை மத்திய அரசு தன்னிச்சையாக எடுக்கவில்லை என்றும், ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்படிதான் மத்திய அரசு அத்தகைய நடவடிக்கையை எடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.  

ஆகவே இந்த இருவரின் முரண்பட்ட பேச்சால், உச்சநீதிமன்றத்துக்கும்,  மத்திய அரசுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

click me!