அமேதி, ரேபரேலியில் போட்டியிட ராகுல், பிரியங்கா தயக்கம்: இன்றிரவுக்குள் முடிவு!

By Manikanda Prabu  |  First Published May 2, 2024, 9:04 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட ராகுல், பிரியங்கா காந்தி விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம்  கான்கின்றன. அம்மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி 62 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் போட்டியிடுகிறது.

மத்தியில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விளங்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் காங்கிரஸ் காட்சியின் கோட்டையான ரேபரேலி, அமேதி மக்களவைத் தொகுதிகளுக்கு மட்டும் நீண்ட இழுபறிக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. அதன்படி, அமேதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில், அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட ராகுல், பிரியங்கா காந்தி விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் ஐந்தாவது கட்டத்தில் மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்குமான வேட்புமனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். இந்த சூழலில் ராகுல், பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் போட்டியிட தயக்கம் காட்டுவது கட்சி மேலிடத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அமேதியில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தக் கோரி காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதுய் இங்கு கவனிக்கத்தக்கது. இந்த இரண்டு தொகுதிகளிலும், வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கட்சியின் தலைவர் கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு அவர் கர்நாடகாவில் ராகுல் காந்தியை சந்தித்தார்.

அப்போது, பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி குடும்பம் போட்டியிடும் தொகுதியில் சகோதரர்களாகிய நீங்கள் இருவரும் போட்டியிடாவிட்டால், கட்சித் தொண்டர்களுக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சிகள், ஆளும் கூட்டணி மற்றும் வாக்காளர்களுக்கு தவறான செய்தியை அது கொண்டு சேர்த்து விடும்,  இதன் தாக்கங்கள் உத்தரபிரதேசம் மட்டுமல்லாமல் நாட்டின் பிற பகுதிகளில் உணரப்படும் என ராகுல் காந்தியிடம் மல்லிகார்ஜுன கார்கே எடுத்துக்கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுலை பொறுத்தவரை அவர் கேரளா மாநிலம் வயநாட்டில் கவனம் செலுத்துவதாக தெரிகிறது. பிரியங்கா காந்தியை பொறுத்தவரை, அவர் ரேபரேலியில் போட்டியிட்டால் அது வாரிசு அரசியல் விமர்சனத்துக்கு வழிவகுக்கும் என அவர் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. ஏற்கனவே தாயார் சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார். ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார். எனவே, மக்களவைத் தேர்தலில் தானும் போட்டியிட்டால் குடும்பத்தில் அனைவரும் தேர்தல் அரசியலில் இருப்பதாக எதிர்க்கட்சியினர் வாரிசு அரசியல் விமர்சனத்தை கூடுதலாக முன்வைக்க காரணமாகி விடும் என கூறி பிரியங்கா காந்தி தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பில் மறுஆய்வு: மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

அதேசமயம், அமேதி, ரேபரேலி மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால் இன்றிரவுக்குள் இருவரும் முடிவெடுத்து மேலிடத்திடம் தெரிவிப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேபரேலி தொகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக எம்.பியாக பதவி வகித்துள்ளார் சோனியா காந்தி. அதற்கு முன்பு 12 முறை காங்கிரஸ் எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்று 3 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். நாடு சுதந்திரமடைந்த பின்னர் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ரேபரேலி தொகுதியின் சிட்டிங் எம்.பி.யான சோனியா காந்தி, ராஜ்யசபாவுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தேர்வாகியுள்ளார். வயது மூப்பு காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனக்கூறி, ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவித்து சோனியா காந்தி கடிதமும் எழுதியிருந்தது நினைவுகூரத்தக்கது.

அதேசமயம், ராகுல் காந்தி கடந்த முறை வெற்றி பெற்ற கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு மற்றும் அமேதி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால், அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிர்தி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார். தனது தந்தை ராஜீவ் காந்தியின் அமேதி தொகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, 2014ஆம் ஆண்டு வரை தொடர்ந்து வெற்றி பெற்றார். ஆனால், 2019 தேர்தலில் பாஜகவின் ஸ்மிர்தி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!