2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முதல் ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. அதேபோல், மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது.
டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த வழக்குகள் மீதான விசாரணையின் தீர்ப்பு கடந்த 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இருப்பினும் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடியும் தருவாயில் உள்ளது.
முன்னதாக, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில், கடந்த 2012ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அலைக்கற்றைகளை ஏலம் மூலம் மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பில் தெளிவு தேவை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனுத்தாக்கல் செய்தது. அதில், ஏலத்திற்கு பதிலாக நிர்வாக ஆணை மூலம் அலைக்கற்றைகளை ஒதுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஒன்றிய அரசு தாக்கல் செய்த மனு பட்டியலுக்காக வந்த போது அதை உச்சநீதிமன்ற பதிவாளர் நிராகரித்துள்ளார். மேலும், 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில் தீர்ப்பையே மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு கோருவதாக உச்சநீதிமன்ற பதிவாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்!
விளக்கம் கேட்பதாக கூறி ஒன்றிய அரசு தவறான மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், இத்தனை ஆண்டுகள் கழித்து எந்த காரணமும் இன்றி இந்த மனுவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்ச நீதிமன்ற பதிவாளர் கூறியுள்ளார். இருப்பினும், பதிவாளரின் உத்தரவை எதிர்த்து 15 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விசாரிக்க அனுமதி கோரும் வாய்ப்பும் மத்திய அரசுக்கு உள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நன்கொடை வழங்கிய ஏர்ட்டெல் நிறுவனத்திற்கு அலைக்கற்றைகளை நேரடியாக விற்க மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிக் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில், ஏலத்திற்கு பதிலாக நிர்வாக ஆணை மூலம் அலைக்கற்றைகளை ஒதுக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.