வங்கியில் வரிசையில் நின்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

First Published Dec 3, 2016, 2:45 PM IST
Highlights


உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூரில் வங்கியில் பணம் எடுக்க வரிசையில் காத்திருந்த பெண்ணுக்கு அழகிய குழந்தை பிறந்தது.

கான்பூர் மாவட்டம், ஜிங்ஜாக் நகரைச் சேர்ந்தவர் சர்வேஷா(வயது30). இவரின் கணவர் அஸ்வேந்திரா கடந்த செப்டம்பர் மாதம் இறந்துவிட்டார். இதனால், அரசு அளித்த நிவாரணத் தொகையான ரூ.2.75 லட்சத்தில் முதல் தவணையைப்  பெற நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நேற்று முன் தினம் வந்திருந்தார். சர்வேஷா நிறைமாத கர்பிணியாக இருந்தார். அவருடன், மாமியார் சாஜியும்வந்திருந்தார்.

இந்நிலையில், காலையில் இருந்து இருவரும் மாலை வரை 3 மணி வரை வரிசையில் பணத்துக்காக காத்திருந்தனர். வரிசையில் நின்று இருந்தால், மிகவும் சோர்வுடன் காணப்பட்ட சர்வேஷாவுக்குதிடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்சுக்கும் வங்கி சார்பில் தகவல் தரப்பட்டது.

ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதையடுத்து, வங்கியில் இருந்த ஒரு அறைக்கு சர்வேஷா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த சில பெண்கள் உதவியால், சர்வேஷாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அதன்பின், அங்கிருந்த போலீஸ் வாகனத்தில், சர்வேசாவும், அவரின் குழந்தையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இது குறித்து சர்வேஷாவின் மாமியார் சாஜி கூறுகையில், “ சர்வேஷா மிகவும் உடல்நிலை மோசமாக இருந்தார். இதனால், நான் பயந்துகொண்டே இருந்தேன். ஆனால், கடவுளின் அருளால், அழகிய பெண்குழந்தையை பெற்று எடுத்து இருக்கிறாள்'' என்றார்.

click me!