நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: அயோத்தி இக்பால் அன்சாரி விருப்பம்!

Published : May 05, 2024, 12:30 PM IST
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: அயோத்தி இக்பால் அன்சாரி விருப்பம்!

சுருக்கம்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என அயோத்தியை சேர்ந்த இக்பால் அன்சாரி விருப்பம் தெரிவித்துள்ளார்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரதமர் மோடி இன்று வாகன பேரணி மேற்கொள்ளவுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் கோட்டையான அம்மாநிலத்தின் எட்டாவாவிலும், மதியம் சீதாபூரிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அதன்பிறகு அயோத்தி செல்கிறார். ராமஜென்மபூமியில் சுவாமி தரிசனம் செய்யும் பிரதமர், லதா சவுக் வரை வாகன பேரணி மேற்கொண்டு வாக்கு சேகரிக்கவுள்ளார்.

உச்ச நீதிமன்ற திர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயதுடைய குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அயோத்தி குழந்தை ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கு பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி இன்று அயோத்தி செல்லவுள்ளார். அங்கு அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர். இதனால், அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ளது,

இந்த நிலையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என அயோத்தியை சேர்ந்த இக்பால் அன்சாரி விருப்பம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் அயோத்தி வருகை குறித்து இக்பால் அன்சாரி கூறுகையில், “பிரதமர் மோடியின் அதிர்ஷ்டம் ராமரின் நகரத்தில் இருந்து தொடங்குகிறது. பிரதமரின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சி மிகவும் சிறப்பாக இருந்தது, அவருடைய வருகையால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்றார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினர் உரிமை கொண்டாடி வந்தன. இதுதொடர்பான வழக்கில் மூன்று தரப்பினரும் நிலத்தை சமமாக பங்கிட்டு கொள்ள, கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரதமர் மோடி அயோத்தியில் இன்று வாகன பேரணி!

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கு தீர்வு காணும் வகையில் 3 பேர் கொண்ட சமரசக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. அதிலும் தீர்வு காணப்படாததால், நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அறக்கட்டளை தொடங்கி அதன் கீழ் ராமர் கோயில் கட்டலாம் எனவும், அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை இஸ்லமிய தரப்புக்கு ஒதுக்க மத்திய அரசும், உத்தரப்பிரதேச மாநில அரசும் ஒதுக்கி தர வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

அயோத்தி வழக்கில் முக்கிய மனுதாரராக இருந்தவர் ஹாசீம் அன்சாரி. உடல்நலக்குறைவால் தனது 95ஆவது வயதில் அவர் காலமானார். இதையடுத்து, அவரது மகன் இக்பால் அன்சாரி வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதில், ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அழைப்பின்பேரில் இக்பால் அன்சாரி குடும்பத்தினர் கலந்து கொன்டனர். இதனை குறிப்பிட்டு, பிரதமர் மோடி தான் கலந்து கொள்ளும்  ஒவ்வொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் அன்சாரி குடும்பத்தினரை புகழ்ந்து எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!