
சர்க்கரை நோயாளிகள் மோர் குடிப்பது ஏன் நல்லது?
கோடை காலம் வந்தாலே, உடலுக்குக் குளிர்ச்சி தரும் பானங்களில் மோர் முக்கியமான ஒன்று. இது உடல் சூட்டைத் தணிக்க உதவுவதோடு, சர்க்கரை நோயாளிகளுக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறைந்த கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் கொண்ட இந்த மோர், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI):
மோரில் கிளைசெமிக் இன்டெக்ஸ் (Glycemic Index - GI) 35 என்ற அளவில் மிகக் குறைவாக உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை மெதுவாக வெளியிடப்படுவதை உறுதி செய்கிறது. குறைந்த GI உணவுகள் இரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்காது. மற்ற பால் பொருட்களை விட மோரில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாகவே உள்ளன.இது உடல் எடையைக் கட்டுப்படுத்தும் என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது பாதுகாப்பானது
புரோபயாடிக்ஸ் (Probiotics):
மோரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் (புரோபயாடிக்ஸ்) செரிமானத்தை மேம்படுத்துகின்றன. இது குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மோரில் உள்ள லாக்டிக் அமிலம் இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்த உதவுகிறது.
இரத்த அழுத்தம் குறைத்தல்:
மோர் குடிப்பதால் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவு குறையலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது சர்க்கரை நோயுடன் தொடர்புடைய இருதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
நீர்ச்சத்து:
மோர் 90% நீர்ச்சத்து கொண்டது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் அல்லது உடல் உழைப்புக்குப் பிறகு ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க மோர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஊட்டச்சத்துக்கள்:
மோர் கால்சியம், வைட்டமின் B12, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. இது எலும்புகள், நரம்பு மண்டலம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
செரிமானத்தை எளிதாக்குதல்:
மோரில் உள்ள லாக்டிக் அமிலம், பாலில் உள்ள லாக்டோஸை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. இதனால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களும் மோரை ஓரளவு எடுத்துக்கொள்ள முடியும்.
மோரை எவ்வாறு உட்கொள்வது?
சர்க்கரை நோயாளிகள் மோரை வெறும் மோராகக் குடிப்பது நல்லது. சுவைக்காகச் சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, அல்லது புதினா சேர்த்து அருந்தலாம். உப்பு சேர்க்காமல் குடிப்பது இன்னும் சிறந்தது, ஏனெனில் அதிக உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். சுண்டைக்காயை மோரில் கலந்து குடிப்பது சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் வராமல் தடுக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும் என்று சில மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மோரை குடிக்க சிறந்த நேரம்:
ஆயுர்வேதத்தின் படி, மோர் பொதுவாக பகல் நேரத்தில் குடிப்பது சிறந்தது. காலையில் வெறும் வயிற்றில் மோர் அருந்துவது நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். காலை உணவு அல்லது மதிய உணவுக்குப் பிறகு ஒரு மணி நேரம் கழித்து மோர் குடிப்பது செரிமானத்திற்கு உதவும். இரவில் மோர் அருந்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது சளித் தொந்தரவுகளை ஏற்படுத்தலாம். ஆனால், சர்க்கரை நோயாளிகள் இரவில் மோர் சாதம் சாப்பிடலாம், ஆனால் அளவாகவும், எளிதில் செரிமானம் ஆகும் அளவிலும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சில மருத்துவர்கள் கூறுகிறார்கள்.