தமிழக அரசு மாணவர்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னையில் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 25 கல்வி நிறுவனங்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் 50 பேருந்துகள் இயக்கப்படும்.
தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சுமார் 23,000 அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பல லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் கல்வியை மேம்படுத்துவதற்காக, திறன்மிகு வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 22,931 ஸ்மார்ட் போர்டுகள் நிறுவப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
24
மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டம்
மாணவர்களுக்கு கல்வியறிவு கிடைக்கும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாயும், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. மேலும் ,நான் முதல்வன் திட்டம் போன்றவை மாணவர் சேர்க்கையை ஊக்குவித்து, கல்வி தரத்தை உயர்த்துவதற்கு உதவி வருகின்றன.
இது மட்டுமில்லாமல் மாணவர்கள் நீண்ட தூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் நிலையில் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க வாய்ப்பை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் 3 ஆயிரத்து 233 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் தினசரி சுமார் 40 லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள்.
34
மாணவர்களுக்காக சிறப்பு பேருந்து
இதில் காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவர்கள் பேருந்தில் செல்லும் போது ஆபத்தான முறையில் பேருந்துகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் முறையானது உள்ளது. இதனால் மாணவர்கள் கீழே விழுந்து உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே மாணவர்களுக்காக பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் முதல்கட்டமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அதிக அளவில் உள்ள இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதுவும் கல்லூரி வளாகத்திற்குள் சென்று மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு வரும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் சென்னையில் 25 கல்வி நிறுவனங்களை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே மாணவ, மாணவிகளுக்கு என தினந்தோறும் காலை மற்றும் மாலை 50 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போல மகளிர்களும் பேருந்தில் நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலையில் பெண்கள் அதிகமாக பயணிக்கும் வழித்தடத்தில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதற்காவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனவே இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.