கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறிய நிலையில் அவரது குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் மீது குற்றச்சாட்டை அடுக்கிய தினகரன்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். மேலும் நயினார் நகேந்திரனுக்கு கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து செல்ல தெரியவில்லை எனக்கூறி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
23
பன்னீர்செல்வம் விலகியதற்கு நான் காரணமா?
இந்நிலையில், இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியதற்கு நான் தான் காரணம் என டிடிவி தினகரன் சொல்கிறார். அவர் ஏன் அப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. மேலும் கூட்டணியில் இருந்து தினகரன் வெளியேறிய நிலையில் அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது.
33
சமரசம் பேச தயார்
பாரதிய ஜனதா கூட்டணி வலுப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு அனைவரும் ஒன்று சேர வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும். அதிமுக.வில் நடைபெறும் பிரச்சினைகள் குறித்து நாம் கருத்து சொல்ல முடியாது. பாரதிய ஜனதா கட்சி என்றைக்கும் அடுத்த கட்சி விவகாரத்தில் தலையிட்டது கிடையாது.
டிடிவி தினகரனும், பன்னீர்செல்வமும் சொல்லி வைத்துக் கொண்டு பேசுவது போல் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனரா என தெரியவில்லை. நான் ஒருபோதும் யாரிடமும் ஆணவமாக நடந்து கொண்டது கிடையாது. மேலும் அமமுக.வை துக்கடா கட்சியாக எண்ணியது கிடையாது. டிடிவி தினகரனின் நிபந்தனைகள் என்னவென்றே தெரியவில்லை. எங்கள் கூட்டணில் அமமுக இடம் பெறவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இது தொடர்பாக தினகரனை நேரில் சந்தித்து சமரசம் பேசவும் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.